விழிஞ்ஞம் துறைமுக போராட்டக்காரர்களிடம் இருந்து பணம் வசூலிக்க மாட்டோம்: அதானி குழுமம்

விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு எதிரான 140 நாள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் ஏற்பட்ட ரூ.220 கோடி நஷ்டத்தை போராட்டக்காரர்களிடம் இருந்து வசூலிக்கப் போவதில்லை என்று அதானி குழுமம் அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞத்தில் கட்டப்பட்டு வரும் அதானி வர்த்தகத் துறைமுகத்தால் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மீனவர்கள் போராட்டம் நடத்தியபோது வன்முறை வெடித்தது. துறைமுகத்திற்குள் புகுந்து போராட்டக்காரர்கள் பொருட்களை சூறையாடினர். கடந்த சில தினங்களுக்கு முன் விழிஞ்ஞம் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 36 போலீசார் காயம் அடைந்தனர். இதில் ரூ.85 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

இந்த நிலையில், தொடர் போராட்டம் காரணமாக கடந்த 4 மாதத்துக்கு மேல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரூ.220 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க கேரள அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்றும் கூறி அதானி குழுமத்தினர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், போராட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டது. போராட்டக் குழுவினருடன் கேரள அரசு பேச்சுவார்த்தை நடத்த எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து கடந்த 2 நாட்களாக போராட்ட குழுவினருடன் அரசுத்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முதல்வர் பினராயி விஜயனும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமூக தீர்வு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 140 நாளாக நடந்து வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக நேற்று போராட்ட குழு அறிவித்தது.

இதற்கிடையே அதானி குழுமத்திற்கு ஏற்பட்ட ரூ.220 கோடி நஷ்டத்தை போராட்டக்காரர்களிடம் இருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே தெரிவித்திருந்தது. ‘’தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை போராட்டக்காரர்களிடம் இருந்து வசூலிக்க மாட்டோம்’’ என்று அதானி குழுமம் அறிவித்துள்ளது. போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த துறைமுகப் பணிகள் இன்று முதல் துவங்கியுள்ளது.