தேர்தல் ஆணையர் நியமனத்தில் உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு மத்திய அரசு ஆளாகி இருப்பதாகவும், எனவே பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் எனவும் நாஞ்சில் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கனரக தொழில் துறை அமைச்சகத்தின் செயலாளராக 37 ஆண்டுகள் பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. ஏனெனில் தனது 37 ஆண்டுக்கால பணியை ராஜினாமா செய்த அடுத்த நாளே இவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும், தனக்கு தேவையானவர்களை மத்திய அரசு முறைகேடாக அதிகாரமிக்க பொறுப்புகளில் நியமித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், தேர்தல் சீர்திருத்தம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் அருண் கோயல் நியமனமும் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டது. ஆனால் இந்த நியமனம் சட்டப்பூர்வமானதுதான் என்றும், இதில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை எனவும் மத்திய அரசு தரப்பில் ஆஜராகி இருந்த அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி விளக்கமளித்தார். நீதிபதிகள் இதனை ஏற்கவில்லை. தேர்தல் ஆணையரை நியமிக்கும் நடைமுறையில் சுதந்திரமான நடைமுறை தேவை என அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். அதாவது கொலீஜியம் அமைப்பு போல ஒரு அமைப்பு தேவை என்று கூறினார். மேலும், தேர்தல் சீர்திருத்தம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது நடைபெற்றுள்ள நியமனம் என்பது நியாயமானது என்று எப்படி நம்புவது? என கேள்வியெழுப்பினர். விருப்ப ஓய்வு பெற்ற அடுத்த நாளே அருண் கோயல் எப்படி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்? எனவும் கேள்வியெழுப்பி இது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இது குறித்து தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த நாஞ்சில் சம்பத் கூறியதாவது:-
உச்சநீதிமன்றம் இப்போதுதான் விழித்துக்கொண்டுள்ளது. இந்தியாவில் ஜனநாயகம் சிரச்சேதம் செய்யப்படுகிறது என்பதை உச்சநீதிமன்றமும் தற்போது உணர்ந்துள்ளது. அங்கே தொட்டு இங்கே தொட்டு தற்போது தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி மத்திய அரசு அவர்களால் ஆன முறைகேடுகளை செய்கிறது. தற்போது புதிய தேர்தல் ஆணையர் விவகாரத்தில் இந்த முறைகேடுகள் வெளியில் வந்துள்ளன. உச்சநீதிமன்றமே அவர்களை கண்டிக்கிற அளவுக்கு மோடியின் ராம ராஜ்ஜியம் இருந்து கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு ஆளாகி இருக்கும் மோடி இந்நாட்டின் பிரதமராக இருக்கக்கூடிய தார்மீக தகுதியை இழந்துவிட்டார். காலியாக ஒரு பதவி இருக்கிறது என்றால் ஏற்கெனவே வேறு ஒரு பதவியில் இருக்கும் நபர் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்துவிட்டு இந்த புதிய பதவிக்கு அவரை கொண்டு வருவதா? என்று நாங்கள் கேள்வியெழுப்பினோம். தற்போது அதையேதான் உச்சநீதிமன்றமும் எழுப்பி இருக்கிறது. ஆனால் இது குறித்து விமர்சனம் செய்தால், காங்கிரஸ் கூடதான் இதுபோன்று செய்திருக்கிறது என்று சமாளிக்கிறார்கள். காங்கிரஸ் சரி இல்லையென்றுதானே உங்களை பதவியில் மக்கள் அமர வைத்திருக்கிறார்கள். ஆனால், மீண்டும் அவர்களை குற்றம் சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்? பாஜகவை கேள்வி கேட்டால் காங்கிரஸை பற்றி கேள்வி கேட்பது என்பது நாட்டில் ஒரு நோயாகவே மாறி வருகிறது. இது ஒரு பச்சை அயோக்கியத்தனம். தங்கள் மீதுள்ள தவறை மறைக்க அடுத்தவர்களை குறை சொல்லுவதை போன்றது. இதைதான் பாஜகவினர் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகின்றனர். இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.