பாராளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து கவலை ஏற்படுகிறது: மம்தா பானர்ஜி

குளிர்கால கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாராளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து கவலை ஏற்படுகிறது என்று மம்தா பானர்ஜி கூறினார்.

பாராளுமன்ற கூட்டத்தொடரில் பின்பற்ற வேண்டிய அணுகுமுறை குறித்து மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி டெல்லியில் தனது கட்சி எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குளிர்கால கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மசோதாக்கள், மாநில விவகாரங்களில் தலையிடுவதாக உள்ளன. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு குரல் கொடுத்தால், ஆளுங்கட்சி தனது பெரும்பான்மையை பயன்படுத்தி, ஓட்டெடுப்பு கூட இல்லாமல் வலுக்கட்டாயமாக மசோதாவை நிறைவேற்றுவதை பார்த்து இருப்பீர்கள். தேர்வு குழு, நிலைக்குழு ஆகியவற்றின் அறிக்கைகளை கூட மத்திய அரசு ஏற்றுக்கொள்வது இல்லை. இதனால், பாராளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து கவலை ஏற்படுகிறது.

இதுவரை பாதுகாக்கப்பட்ட கவுரவமும், மரியாதையும் தொடர்ந்து பாதுகாக்கப்படுமா என்று தெரியவில்லை. ஜனநாயகத்தில் எத்தனையோ அரசியல் கட்சிகளும், சித்தாந்தங்களும் இருந்தாலும், பாராளுமன்ற பெரும்பான்மைதான் எப்போதும் வெற்றி பெறுகிறது. அதற்காக எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல. இதை எங்கள் கட்சி துணிச்சலாக எதிர்க்கும். மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து போராடும். இவ்வாறு அவர் கூறினார்.