அம்பேத்கருக்கு காவி சாயம் பூசப்பட்டதை கண்டித்து 12ந்தேதி ஆர்பாட்டம்: திருமாவளவன்

அம்பேத்கருக்கு காவி சாயம் பூசப்பட்டதை கண்டித்து விசிக தலைவர் ஆர்பாட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் தாழ்த்தப்பட்ட மகர் சமூகத்தில் பிறந்து, இந்து மதத்தில் கடைபிடிக்கப்பட்ட அத்தனை தீண்டாமை கொடுமைகளையும் அனுபவித்த அண்ணல் அம்பேத்கர், கல்வி மறுக்கப்பட்டபோதும், அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து, நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர் அம்பேத்கர். இந்து மதத்தில் கடைப்பிடிக்கப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, மூன்று லட்சம் பேரோடு அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு வெளியேறி 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி பௌத்தத்தைத் தழுவினார்.

மதச்சார்பற்ற, சாதிய ஒடுக்குமுறைகளற்ற இந்தியா என்னும் பெருங்கனவுக்கு விதையிட்ட அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் நாடு முழுவதும் கடந்த 6ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு மரியாதை செலுத்தினர். இந்த நிலையில், அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி, அவரது புகைப்படத்துக்கு காவி சட்டை அணிவித்து, திருநீறு பட்டை, குங்கும் பொட்டு வைத்த உருவத்துடன் சித்தரித்து இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில், “காவி(ய) தலைவனின் புகழை போற்றுவோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, பழந்தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், வரலாற்றுச்சிறப்பு மிக்கவர்களுக்குக் காவி சாயம் பூசுவது வழக்கம் தொடர்ந்து வருகிறது. புத்தகத்தில் பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் அச்சடிக்கப்பட்டது தொடங்கி, திருவள்ளுவரின் நெற்றியில் திருநீறு பூசி, கழுத்தில் ருத்திராஷ்டிர மாலை அணிந்து அவருக்கு காவி சாயம் பூசியது வரை காவி சாயம் பூசப்படுவதற்கும், அவர்களுக்கு மத சாயம் பூசப்படுவதற்கும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அந்த வரிசையில் தற்போது அம்பேத்கருக்கு இந்து முன்னணியினர் காவி சாயம் பூசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்து மக்கள் கட்சியினரின் இந்த போஸ்டர்களை அகற்ற வேண்டும் என காவல்துறையில் பல்வேறு அமைப்பினர் புகார் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் அந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டன. அம்பேத்கரை காவிமயமாக்கி இழிவுபடுத்தும் இந்து மக்கள் கட்சியினருக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் அம்பேத்கருக்கு காவி சாயம் பூசப்பட்டதை கண்டித்து வருகிற 12ம் தேதி ஆர்பாட்டம் நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘ஆதிபௌத்த அடையாளம் மாமனிதர் அம்பேத்கருக்கு – காவி – திருநீறு – குங்குமமா? சாதி இழிவைத் துடைத்தெறிந்த சமத்துவப் போராளி அம்பேத்கருக்கு சாமியார் போன்ற அடையாளமா? புராணக் குப்பைகளைச் சாம்பலாக்கிய பூர்வீகப் பௌத்தர் அம்பேத்கருக்கு பொட்டுப் பூசி அவமதிப்பதா?. வரலாற்றைத் திரிக்கும் வன்முறைக் கும்பலை வன்மையாகக் கண்டிக்கிறோம்! திருவள்ளுவர், பெரியாரைத் தொடர்ந்து புரட்சியாளர் அம்பேத்கரை காவி – திருநீறு – குங்குமம் இட்டு அவமதிக்கும் சனாதன சங்பரிவார் கும்பலைக் கண்டித்து திசம்பர்-12ம் தேதி தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்!’’ என அவர் தெரிவித்துள்ளார்.