ரஷ்யாவில் தாக்குதல் நடத்துவதற்கு உக்ரைனை தாங்கள் ஊக்குவிக்கவோ, உதவியளிக்கவோ இல்லை. குளிா்காலத்தை ஒரு போா் ஆயுதமாக ரஷ்யா ஆக்கி வருகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து வாசிங்டனில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் கூறியதாவது:-
உக்ரைனில் பொதுமக்களுக்குத் தேவையான வெப்பம், குடிநீா், மின்சாரம் ஆகியவற்றை வழங்கும் அடிப்படைக் கட்டமைப்புகள் முழுவதையும் அழிக்கும் முயற்சியில் ரஷ்யா இறங்கியுள்ளது. அந்தக் கட்டமைப்புகள் மீது இரவு பகல் பாராமல் தாக்குதல் நடத்துவதன் மூலம், குளிா்காலத்தை ஒரு போா் ஆயுதமாக ரஷ்யா ஆக்கி வருகிறது.
ரஷ்யாவிலுள்ள விமான தளங்களில் உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியதாக அந்த நாடு கூறியுள்ளது. எனினும், ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்துவதற்கு உக்ரைனை நாங்கள் ஊக்குவிக்கவும் இல்லை; அதற்கான வசதிகளை அந்த நாட்டுக்கு நாங்கள் செய்து தரவும் இல்லை. உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால் அந்த நாட்டு மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு மட்டுமே நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம். எனவே, தங்கள் நாட்டு இறையாண்மையையும், மக்களையும் ரஷ்ய அத்துமீறல்களில் இருந்து உக்ரைன் பாதுகாத்துக்கொள்வதற்கான ஆயுத தளவாட உதவிகளை மட்டுமே அந்த நாட்டுக்கு அளித்து வருகிறோம் என்றாா் ஆன்டனி பிளிங்கன்.
எனினும், அந்த செய்தியாளா் சந்திப்பில் பங்கேற்ற அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டின், ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்துவதற்குத் தேவையான ஏவுகணையை உக்ரைன் சொந்தமாக உருவாக்கினால், அதனை தங்கள் நாடு தடுக்காது என்று கூறினாா்.