ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான தீர்ப்பு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு!

ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்தது.

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அனுமதி சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த விசாரணையின் போது கலாச்சார அடிப்படையில் ஜல்லிக்கட்டு போட்டிகளின் முக்கியத்துவம் குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதங்களை முன்வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டிகள் கலாச்சாரத்தில் ஒரு பகுதியாகும் என குறிப்பிட்ட ரோத்தகி அந்த நடைமுறை அவசியமானதா இல்லையா என நீதிமன்றம் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பினார். விலங்கை வளர்க்கும் எஜமான் விரும்பியபடி விலங்குகள் செய்யும் என்றும் அதனை துன்புறுத்தல் எனக் கருத முடியாது என்றும் வாதிட்டார். மனிதர்களின் நலனுக்காக செய்யப்படும் செயல்களை தடுக்க முடியாது என்றும் அவர் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த நடைமுறைகளை மனிதர்களின் நலனுக்கானது என எவ்வாறு கூறமுடியும்? ஜல்லிக்கட்டு போட்டிகளால் மனித உயிரிழப்பு ஏற்படுகிறது என்ற மனுதாரர்கள் தரப்பு கூறுகின்றனரே.. அதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள் எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழக அரசின் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, கலாச்சாரம் என்பதே மனிதர்களின் நலனுக்கானது தான், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த பல்வேறு வழிகாட்டுதல் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன எனத் தெரிவித்தார். மேலும், ஒரு விலங்கை பழக்கப்படுத்தும்போது உணவளித்தல் மற்றும் குச்சியை வைத்து மிரட்டி பழக்குதல் என்ற அடிப்படைதான் கடைபிடிக்கப்படுகிறது. நாய், குதிரை என எந்த விலங்காக இருந்தாலும் இதே நடைமுறைதான். இந்த நடைமுறைகளை கடைபிடித்தால்தான் விலங்குகள் உரிமையாளரின் கட்டளைக்கு பழக்கப்பட்டு பணிந்து வரும். ஒரு விலங்கை வீட்டு விலங்காக பழக்கப்படுத்த சில கடினமான நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டி வரும். இது கடந்த 5000 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.

அப்போது, பீட்டா அமைப்பு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சியாம் திவான், காளைகள் துன்புறுத்தல், ஜல்லிக்கட்டில் மனிதர்கள் உயிரிழந்தது உள்ளிட்டவை தொடர்பாக ஆதாரப்பூர்வ ஆவணங்கள் இல்லை என தமிழக அரசு கூறுவது தவறானது. பல்வேறு ஆய்வுகள் அடிப்படையிலான தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன எனக் கூறி, 2017ஆம் ஆண்டு முதல் 2022 வரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்த மனிதர்கள், காளைகள் பற்றிய புள்ளி விவரத்தைக் குறிப்பிட்டார். கண் துடைப்பு மேலும், விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறுவது கண் துடைப்பு, தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியது அனைத்தும் தவறானது உண்மைக்கு புறம்பானது என வாதிட்டார்.

இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுகளுக்கு போட்டிகள் முடிவடைந்த பின்னர் மருத்துவ சோதனைகள் செய்யப்படுகிறதா என்ற நீதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், போட்டிகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் காளைகளுக்கு சோதனைகள் செய்யப்படும் என உறுதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தேனி அதிமுக எம்பி ரவீந்திரநாத், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகிய இடையீட்டு மனுதாரர்கள் சார்பாக வாதங்கள் முன் வைக்கப்பட்டன. விஜயபாஸ்கரின் 13 காளைகள் பல ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளதாகவும் வெளிநாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படுபவர்கள் தமிழ் கலாச்சாரம் குறித்து கூற எந்த உரிமையும் இல்லை என விஜயபாஸ்கர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழ் கலாச்சாரம், விவசாயிகள் வாழ்வாதாரம் ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கும் ஜல்லிக்கட்டை தடை செய்யக்கூடாது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக எம்.பி ரவீந்திரநாத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அதிமுக மோதல் விவகாரத்தில் விஜயபாஸ்கர் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து வரும் நிலையில், ஜல்லிக்கட்டுக்காக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் – விஜயபாஸ்கர் தரப்பு ஒன்றாக இணைந்து ஒத்த கருத்துகளை எடுத்து வைத்துள்ளனர்.

பீட்டா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான், ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படவில்லை என்ற தமிழ்நாடு அரசின் வாதம் உண்மைக்கு புறம்பானது எனக் கூறினார். நேரடியாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் காளைகள் காயமடைந்துள்ளதும், மனிதர்கள் உயிரிழந்ததும் தெரிய வந்துள்ளதாக ஷ்யாம் திவான் தெரிவித்தார். இதற்கான புகைப்பட ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ஜல்லிக்கட்டு புகைப்படங்களை உங்களுக்கு எடுத்துக் கொடுத்தது யார்? புகைப்படங்களின் அடிப்படையில் மட்டும் முடிவுக்கு வர முடியுமா? என பீட்டா அமைப்புக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர். பின்னர் ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.