புதுக்கோட்டை சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கான மரண தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைப்பதாகவும், இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே, ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி, கடந்த 2020ல் மாயமானார். போலீஸ் விசாரணையில், பஸ் ஸ்டாண்டில் பூக்கடை வைத்திருந்த ராஜா சிறுமியை பலாத்காரம் செய்து, கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம், ராஜாவுக்கு 3 மரண தண்டனை, ஒரு ஆயுள், 2 ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்ததோடு, அரசு சார்பில் ₹5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டது. இதே உத்தரவை உயர் நீதிமன்ற மதுரை கிளையும் உறுதி செய்திருந்தது.
இந்நிலையில் ராஜா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, குற்றவாளிக்கான மரண தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைப்பதாகவும், இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.