டுவிட்டரில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ள 150 கோடி கணக்குகள் விரைவில் நீக்கப்படும் என்று அதன் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் டுவிட்டரில் பல ஆண்டுகளாக ‘டுவீட்’ அல்லது லாக் இன் செய்யாத கணக்குகளை நீக்க திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் 150 கோடி ட்விட்டர் கணக்குகள் நீக்கப்படும் என்றும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, டுவிட்டரில் பிரபலங்கள் பெயரில் உள்ள போலி கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எலான் மஸ்க் மீது , டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் முன்னணி இடத்தில் இருந்த டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்தே அது சர்ச்சைகளில் முதன்மை இடத்துக்கு வந்தது. எலான் மஸ்க் பதவியேற்ற பிறகு, டுவிட்டர் நிறுவனத்திலிருந்து, சுமார் 7,500 ஊழியர்கள் மொத்த எண்ணிக்கையில் பாதி பேர் வேலை விட்டு நீக்கப்பட்டனர், பலர் தாங்களாகவே வெளியேறினர். இந்த நிலையில், சமூக வலைத்தள நிறுவனமான டுவிட்டருக்கு எதிராக நாள்தோறும் நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்து வருகிறது. இதில், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள டுவிட்டர் அலுவலகத்தை, சட்டத்துக்கு மாறாக படுக்கை அறைகளை உருவாக்கி, ஊழியர்கள் அலுவலகத்திலேயே தங்குமாறு உத்தரவிடப்பட்டதாகவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.