குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ராஜினாமா!

குஜராத் மாநில முதலமைச்சர் பதவியை பூபேந்திரபாய் படேல் ராஜினாமா செய்துள்ளார். குஜராத் முதல்வராக 2வது முறையாக பூபேந்திர படேல் 12ல் பதவி ஏற்க இருக்கிறார்.

182 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த 1 ஆம் தேதி முதற்கட்டமாக 89 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதம் உள்ள 93 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, கடந்த 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில், ஆளும் பாஜக – காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவியது.

குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை, தொடர்ந்து 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரது சொந்த மாநிலம் என்பதால், இங்கு மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதை, பாஜக கவுரவப் பிரச்னையாக பார்த்தது. குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்லில், இரண்டு கட்டங்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதன்படி, மொத்தம் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 156 இடங்களில், ஆளும் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்தது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெறும் 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்று கணக்கை தொடங்கியது. குஜராத் மாநிலத்தில் பாஜக இதுவரை இல்லாத வகையில் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. மேலும், ஏழாவது முறையாக மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் அமர உள்ளது.

இந்நிலையில் இன்று, காந்தி நகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்தை சந்தித்த முதலமைச்சர் பூபேந்திர படேல், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து அதற்கான கடிதத்தை வழங்கினார். மேலும், தனது தலைமையிலான அமைச்சரவையும் ராஜினாமா செய்வதாகவும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

ராஜினாமா செய்துள்ள பூபேந்தி படேல், வரும் 12 ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி அளவில், குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக, இரண்டாவது முறையாக பதவி ஏற்க இருக்கிறார். இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.