உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றில் மொராக்கோ அணியிடம் தோல்வியடைந்து போர்ச்சுகல் வெளியேறியதை தொடர்ந்து அந்த அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுது ரசிகர்களையும் கண்கலங்க செய்து உள்ளது.
தற்போதைய கால்பந்து உலகில் பல ஆண்டுகளாக தலைசிறந்த 2 கால்பந்து வீரர்களாக திகழ்ந்து வருபவர்கள் என்றால், ஒருவர் போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ, மற்றொருவர் அர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸி. பிரான்ஸ் வீரர் எம்பாபே, பிரேசில் வீரர் நெய்மர் என பல நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் ரொனால்டோ மெஸ்ஸிக்காகவே பலர் கால்பந்து போட்டிகளை பார்த்து வருகின்றனர். தமிழ்நாட்டில் எப்படி விஜய், அஜித் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்படுமோ அதற்கு இணையாக இந்தியா உட்பட உலகம் முழுவதும் மெஸ்ஸி, ரொனால்டோ ரசிகர்கள் இடையே மோதல் ஏற்படும். அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளத்தை தன்வசம் வைத்து இருக்கிறார்கள் இரு வீரர்களும்.
இந்த நிலையில் எந்த அணி 2022 உலகக்கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இந்த தொடரை ஆவலுடன் பார்த்தனர். ரொனால்டோ – மெஸ்ஸி இருவீரர்களும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பல சாதனைகளை கால்பந்தில் படைத்து இருக்கிறார்கள். இத்தனை சாதனைகளை படைத்தாலும் இருவராலும் அடைய முடியாத ஒரு விசயம் உள்ளது என்றால் அதுதான் பிபா உலகக்கோப்பை. இதனை தங்கள் அணிக்காக பெற்றுக்கொடுப்பதே லட்சியம் என இருவருமே தெரிவித்தனர். இதில் போர்ச்சுகல் அணி ஒருமுறை கூட உலகக்கோப்பையை வெல்லாத நிலையில், தனது நாட்டு உலகக்கோப்பையை வென்று கொடுப்பேன் என சபதம் ஏற்றார் ரொனால்டோ. ஒரு காலத்தில் சுமாரான அணியாக கருதப்பட்ட போர்ச்சுகலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் கிடைக்க காரணமே ரொனால்டோ என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தனது ஆட்டத்தாலும், நடவடிக்கைகளாலும் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார் அவர். ஏற்கனவே ரொனால்டோவுக்கு 37 வயதாகிவிட்ட நிலையில், இதுவே அவரது கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் என்பதால் எப்படியாவது இதில் போர்ச்சுகல் வெற்றிபெறும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அதே போன்று உலகக்கோப்பை பயணம் அந்த அணிக்கு வெற்றிகரமாக தொடங்கி காலிறுதி வரை முன்னேறியது. இதனால் ஒரு பக்கம் போர்ச்சுகல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி இருந்தாலும் மறுபக்கம், ரொனால்டோவுக்கும் அவரது ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றம். அதற்கு காரணம் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ். லீக் சுற்றில் தென்கொரியாவிடம் போர்ச்சுகல் தோல்வியடைந்த போட்டியில் ரொனால்டோவை பாதியில் வெளியேற்றி மாற்று வீரரை பயிற்சியாளர் களமிறக்க இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இது சூப்பர் 16 மற்றும் காலிறுதி போட்டிகளிலும் பிரதிபலித்து உள்ளது. சுவிட்சர்லாந்துக்கு எதிரான சூப்பர் 16 சுற்றில் ரொனால்டோவுக்கு பதிலாக இளம் வீரர் ரமோஸ் களமிறக்கப்பட்டார். அப்போட்டியில் சில நிமிடங்கள் மட்டுமே ரொனால்டோ விளையாடினார். அதேபோல் நேற்று மொராக்கோவுக்கு எதிரான காலிறுதி சுற்றிலும் அவர் மாற்று வீரராகவே களமிறக்கப்பட்டார். உலக கால்பந்து ஜாம்பவானான ரொனால்டோவை அவமானப்படுத்தும் செயல் இது என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். அவருக்காக போட்டியை காண வந்தவர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இறுதியாக இப்போட்டியில் 1-0 என்ற கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி முதல் முறையாக அறையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது ஆப்பிரிக்க நாடான மொராக்கோ. இதன் மூலம் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ரொனால்டோவின் கனவு தகர்ந்ததாக பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பையிலிருந்து போர்ச்சுகல் வெளியேறியதை செரிமானிக்க முடியாமல் மைதானத்திலேயே ரொனால்டோ உடைந்து அழுதார். இதனை கண்ட அந்நாட்டு ரசிகர்களின் கண்களும் குளமாகின. இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து பலரும் பகிர்ந்து வருகின்றனர்.