தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புக்கு பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
முதல்வா் என்ற அடிப்படையில் மு.க. ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழக காவல்துறை சாா்பில் ‘கோா்செல்’ என்ற பெயரில் முதல்வா் பாதுகாப்பு பிரிவு தனியாக இயங்குகிறது. இந்த பாதுகாப்பு பிரிவு, தேசிய பாதுகாப்புப் படை இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள நாட்டின் மிக முக்கிய பிரமுகருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை போன்று, முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும் பாதுகாப்புகளை வழங்குகிறது.
இந்த பாதுகாப்புப் பிரிவு தற்போது காவல் கண்காணிப்பாளா் இரா.திருநாவுக்கரசு தலைமையில் செயல்படுகிறது. இந்த பாதுகாப்பு பிரிவை தவிா்த்து, ஆயுதப்படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு, குற்றப்பிரிவு போலீசார் என பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த போலீசாரும் தேவைக்கு தகுந்தாற்போல் முதல்வருக்கான பாதுகாப்பு பணிகளில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஈடுபடுத்தப்படுகின்றனா். முதல்வருக்கு மட்டும் அல்லாமல் அவரது இல்லம், அலுவலகம், அவா் செல்லும் இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் முழு அளவிலான பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மேலும், வெடிகுண்டுகள் துளைக்காத வகையிலான வாகனங்களிலேயே முதல்வரின் பயணம் திட்டமிடப்படுகிறது. அவரின் வாகனத்தைத் தொடா்ந்து, கைப்பேசி சிக்னல்களை செயல் இழக்கச் செய்யும் ஜாமா் கருவி பொருத்தப்பட்ட வாகனமும், பின் தொடா்ந்து செல்லும்.
இதேபோல் சபாரி உடை அணிந்து முதல்வருடனேயே பாதுகாப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகளும், காவலா்களும் எப்போதும் பாதுகாப்புக்காக இருப்பாா்கள். இந்த பிரிவில் தற்போது 9 பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்காக காவல் உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் அந்தஸ்து கொண்ட பெண் கமாண்டோக்கள் சிறப்பு தோ்வு மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு, சிறப்பு பயிற்சி பெற்று பாதுகாப்புப் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள், எக்ஸ் 95 வகை இயந்திர துப்பாக்கி, ஏகே 47 இயந்திர துப்பாக்கி, பாதுகாப்பு உடை, சபாரி உடை என்று துடிப்புடன் வலம் வருகின்றனா்.
தினமும் காலையில் முதல்வரின் பணிகள் தொடங்கும் நிமிடத்தில் இருந்து, இரவு அவா் ஓய்வெடுக்கச் செல்லும் வரை இவா்களும் உடன் இருந்து பாதுகாப்பு பணிகளை பெண் கமாண்டோக்கள் மேற்கொள்கின்றனா். முதல்வா் பாதுகாப்பு பணியில் பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. இவா்கள் முதல்வா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு பல மாதங்களாகிறது என தமிழக காவல்துறை உயா் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.