பிரதமர் மோடியின் பலவீனத்தை 2018 சந்திப்பில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிந்து கொண்டு எல்லையில் அட்டாக் செய்து வருகிறார் என பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியா -சீனா இடையே தொடர்ந்து எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. இந்தியாவின் நிலப்பரப்புகளை ஆக்கிரமிக்கும் முனைப்பில் சீனா எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே மோதி வருகிறது. சமீப காலமாக மோதல் இல்லாமல் இருந்தது. கடந்த 2020ல் லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா வீரர்கள் மோதிக்கொண்டனர். அதன்பிறகு தற்போது மீண்டும் இருநாட்டு ராணுவ வீரர்கள் மோதி கொண்டுள்ளனர். அதன்படி அருணாச்சல பிரதேச எல்லையில் தவாங் செக்டார் பகுதியில் உள்ள யங்ங்ட்சி எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே கடந்த 9 ம் தேதி இந்தியா-சீனா வீரர்கள் மோதி கொண்டுள்ளனர். இதில் இரு நாடுகளின் வீரர்களும் காயமடைந்துள்ளனர். 200 சீன வீரர்கள் கையில் ஆயுதங்கள், கட்டைகளுடன் இந்தியாவுக்குள் அத்துமீற முயன்றனர். இதையடுத்து இந்திய வீரர்கள் 50 பேர் அவர்களை எதிர்த்து விரட்டினர். தவாங் செக்டார் எல்லைப்பகுதியில் இந்தியா – சீனா இடையே எல்லையில் ரோந்து பணியில் ஈடுபடுவதில் சர்ச்சை உள்ளது. இரு நாடுகளும் தங்கள் எல்லையை வெவ்வேறு பகுதிகளாக வரையறுத்துள்ளன. இந்நிலையில் தான் கடந்த 9 ம் தேதி மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பிறகு நேற்று தான் இந்த விவகாரம் மீடியாக்களில் வெளியானது. இந்தியா-சீனா இடையேயான மோதலை மத்திய அரசு மறைத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட தொடங்கின. மேலும் தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடப்பதால் அங்கு விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதன்படி இன்று ராணுவ பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் தான் இந்தியா-சீனா எல்லை பிரச்சனை, இருநாட்டு வீரர்கள் இடையேயான மோதல் தொடர்பாக பிரதமர் மோடியை, பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு பதிவுகளை செய்துள்ளார். அதில் சுப்பிரமணியன் சாமி கூறியிருப்பதாவது:-
2018 ம் ஆண்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த வேளையில் பிரதமர் மோடியின் பலவீனங்களை ஜி ஜின்பிங் அறிந்து கொண்டார். அதாவது கேமரா முன் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் இருக்கும் ஆர்வம், விதவிதமாக ஆடைகள் அணிந்து சந்தோஷப்படுவது, சகாக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர்ப்பது உள்ளிட்டவற்றின் மூலம் பிரதமர் மோடியின் பலவீனங்களை ஜி ஜின்பிங் தெரிந்து கொண்டார். இதன்மூலம் உலகத்தில் அதிகாரத்தை பெறுவதற்கான முக்கோண போட்டியில் இந்தியாவை வீழ்த்த ஜி ஜின்பிங் முடிவு செய்துள்ளார்.
சீனா விவகாரத்தில் 1962ம் ஆண்டில் பிரதமராக இருந்த நேரு மோசமான வார்த்தைகளால் விமர்ச்சிக்கப்பட்டார். பிரதமர் மோடியையும் அதேபோல் தான் விமர்சனம் செய்ய வேண்டுமா?. கடந்த 1962ல் ஜனசங்கம் நேருவை கடுமையாக விமர்சனம் செய்தது. ஆனால் இன்றைய எதிர்க்கட்சிகளின் நிலை என்னவாக இருக்கிறது?. நேருக்கு ஏற்பட்டதை போல் பிரதமர் மோடிக்கு நடக்குமா?.
முதல்வராக இருந்து தற்போது பிரதமராக மாறியுள்ள நரேந்திர மோடி சீனாவை சேர்ந்தவர்களுடன் நெருக்கமாக பழகி வருகிறார். இந்த வேளையில் அமைச்சர்கள் ஏன் நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியன் சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.