அடுத்த தேர்தல் தேஜஸ்வி யாதவை முன்னிலைப்படுத்துவேன்: நிதிஷ் குமார்

பீகார் மாநிலத்தில், 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை தேஜஸ்வி யாதவ் தலைமையில் சந்திப்போம் என, அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்து உள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் நிறுவனரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார், பழைய கூட்டணிக் கட்சியான, லாலு பிரசாத் யாதவின், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். இந்தக் கூட்டணிக்கு, மகாகத்பந்தன் என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இதை அடுத்து, பீகார் மாநில முதலமைச்சராக, நிதிஷ் குமார் பதவியேற்ற நிலையில், துணை முதலமைச்சராக, தேஜஸ்வி யாதவ் பதவி ஏற்றார்.

இதற்கிடையே, 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, நிதிஷ் குமார் முன்னிலைப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கேற்றவாறு, அவரும் பாஜக எதிர்ப்பு மனநிலைக் கொண்ட கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். தேசிய அரசியலில் கவனம் செலுத்தும் வகையில், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அடிக்கடி தலைநகர் டெல்லிக்கு பயணமும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று பாட்னாவில், மகாகத்பந்தன் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் பேசியதாவது:-

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், பிரதமர் வேட்பாளர் நான் இல்லை. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை, ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என, பெரும்பாலான அரசியல் கட்சிகள் கருதுகின்றன. அனைத்து கட்சிகளையும் பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைக்கும் பணியில் நான் ஈடுபட்டு வருகிறேன். 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்லில், தேஜஸ்வி யாதவை முன்னிலைப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் தேஜஸ்வி யாதவ் தலைமையில் எதிர்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, நாலந்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியதாவது:-

நாங்கள் நிறைய செய்கிறோம். மேலும் எதிர்காலத்தில் ஏதாவது செய்ய மீதி இருந்தால், தேஜஸ்வி வேலை செய்து கொண்டே இருப்பார், எல்லாவற்றையும் செய்து முடிப்பார். எங்களைப் பிரிக்க நினைக்க முயற்சிக்காதீர்கள். ஒற்றுமையாக இருங்கள், ஒன்றிணைந்து செயல்படுங்கள்; உரசல்கள் இருக்கக் கூடாது.
தேஜஸ்வி யாதவை முன்னெடுத்துச் செல்ல என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன். அவரை இன்னும் மேலே கொண்டு செல்வேன். நீங்கள் அனைவரும் எல்லாவற்றையும் பார்த்து புரிந்து கொள்வீர்கள். நான் சொல்வதைக் கேளுங்கள். இது என்னுடைய தனிப்பட்ட நோக்கம் அல்ல; நாம் என்ன செய்தாலும் காந்தியின் வழியை பின்பற்றுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.