அருணாச்சல பிரதேச எல்லையான தவாங் செக்டார் விவகாரத்தில் நாட்டின் முதலாவது பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு மீது அம்மாநில முதல்வர் பெமா காண்டு பகிரங்கமாக குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் சீனா அத்துமீற முயற்சித்தது. இதனை நமது ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்து சீன ராணுவத்தினரை விரட்டியடித்தனர். இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்பது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் வலியுறுத்தல். ஆனால் மத்தியில் ஆளும் பாஜகவோ, சீனாவின் அத்துமீறலுக்கு காரணமே காங்கிரஸும் நாட்டின் முதலாவது பிரதமர் நேருவும்தான் என குற்றம்சாட்டுகிறது. சீனாவின் அத்துமீறல் தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சீனாவிடம் மென்மைப் போக்கு கடைபிடிக்கப்பட்டது என்றார். அதேபோல் சீனாவுக்குதான் நேரு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்பெற்றுத் தந்தார் என்கிறது பாஜக. தெற்காசிய ஒற்றுமை என்ற அடிப்படையில் நேரு சில நெகிழ்வுத் தன்மை கொள்கைகளை பின்பற்றியதை சீனாவுக்கு ஆதரவான போக்கு என பாஜக விமர்சிக்கிறது.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்ந்து அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டுவும் நேரு மீது குற்றம்சாட்டி இருக்கிறார். அதாவது அருணாச்சல பிரதேசத்தின் எல்லையான தவாங் செக்டார் தொடர்பாக இந்தியா- சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற தருணம். நேருவோ, தவாங் செக்டாரை நாம் பெற்று என்ன சாதிக்கப் போகிறோம் என்ற மனநிலையில் இருந்தார் என கூறியிருக்கிறார். இது தொடர்பாக பெமா காண்டு கூறியதாவது:-
அருணாச்சல பிரதேச மாநிலமானது நெபாஃபா என்கிற பெயரில் வடகிழக்கு முன்னரனாக அழைக்கப்பட்ட காலம். அப்போது அருணாச்சல பிரதேச நிர்வாகம் அஸ்ஸாமின் கீழ் இருந்தது. 1949-ம் ஆண்டு சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில் தவாங் செக்டாரில் நமது தேசியக் கொடியை ஏற்ற விரும்பினர் நமது ராணுவ அதிகாரிகள். அப்போது கவர்னராக இருந்த ஜெய்ராம்தாஸ் தெளலத்ராம், மேஜர் ஜெனரல் பாப் காடிங் ஆகியோர் இதில் முனைப்பாக இருந்தனர். ஆனால் பிரதமராக இருந்த நேரு, தவாங் செக்டாரை வைத்துக் கொண்டு என்ன செய்ய இருக்கிறோம் என அதிகாரிகளிடம் கேட்டார். ஆனாலும் மேஜர் பாப் காடிங், தவாங் செக்டாரில் நமது தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது முதல் இந்தியாவின் கட்டுப்பாட்டில்தான் தவாங் செக்டார் இருந்து வருகிறது. இவ்வாறு பெமா காண்டு கூறினார்.