ஜெர்மனியில் வெடித்து சிதறியது உலகின் மிகப்பெரிய மீன்காட்சி தொட்டி!

ஜெர்மனியில் ஹோட்டல் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய மீன் காட்சித் தொட்டி திடீரென வெடித்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் இருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள மிகப்பெரிய ஹோட்டல்களில் ஒன்று ராடிசன் ப்ளூ (Radisson Blu). இந்த ஹோட்டலின் வரவேற்புப் பகுதியில் 46 அடி உயரத்தில் மீன் காட்சித் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. உலகின் மிகப்பெரிய மீன் காட்சித் தொட்டியாக கூறப்படும் இது, ஒரு மில்லியன் லிட்டர் தண்ணீரால் நிரப்பப்பட்டு, 1,500 வெப்பமண்டல மீன்களால் நிரப்பப்பட்டிருந்தது. இந்த மீன் தொட்டியானது இன்று திடீரென வெடித்துச் சிதறியது. இதில் தொட்டியில் நிரப்பப்பட்டிருந்த மில்லியன் லிட்டர் நீரும் வெள்ளம் போல் பாய்ந்து வீதிகளில் ஓடியது. இந்தச் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து விரைந்து வந்த 100க்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்கள், சிதறிக் கிடந்த கண்ணாடி உள்ளிட்ட அபாயகரமானப் பொருட்களை அகற்றினர். உடனடியாக அந்த கட்டிடத்திற்கு அருகில் இருந்த பெரிய சாலையும் மூடப்பட்டது. விபத்திற்கான காரணம் மீன் தொட்டியின் உறைபனி வெப்பநிலை கசிவு எனக் கூறப்படுகிறது. இந்த விபத்துக் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டிரோன்கள் மூலம் கண்ணாடித்துகள்கள் சிதறிய இடங்களைப் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, விபத்தில் காயமடைந்த இருவரின் உடல்நிலை பற்றிய தகவல்கள் சரிவர தெரியவில்லை. அதேபோல், வெடித்துச் சிதறிய மீன் தொட்டியில் இருந்த 1,500க்கும் மேற்பட்ட மீன்களின் கதி பற்றியும் தகவல்கள் இல்லை.

மீன் தொட்டி வெடித்ததை அடுத்து அருகில் உள்ள கடைகள் மற்றும் விடுதிகளில் இருந்தவர்களை காலி செய்யும்படி போலீசார் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு மாற்று ஏற்பாடு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பெர்லினின் முக்கிய சுற்றுலா அம்சமாக கருதப்படும் இந்த மீன் காட்சித்தொட்டி வெடித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.