காஞ்சிபுரம் அருகே பழமை வாய்ந்த பெருமாள் கோயிலை காணவில்லை: பொன்மாணிக்கவேல்

காஞ்சிபுரம் அருகே பழமை வாய்ந்த பெருமாள் கோயிலை காணவில்லை என்று ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் போலீசில் புகார் தந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஒரு போலீஸ் ஸ்டேஷன் காணாமல் போய்விட்டது என்ற செய்தி மீடியாவில் வெளிவந்தால், எந்த அளவிற்கு அதிர்வுகளை ஏற்படுத்துமோ, அதேபோல் ஒரு தாசில்தார் அலுவலகம் காணாமல் போய்விட்டது என்ற செய்தி ஊடகங்களில் வெளி வருமேயானால், அது எந்த அளவிற்கு அதிர்வலைகளை மக்கள் மனதில் ஏற்படுத்துமோ, அதுபோலவே, இன்று காஞ்சிபுரம் அருகே ஒரு பெருமாள் கோயில் களவாடப்பட்டு,அதன் சிலைகளும் களவாடப்பட்டது என்று சொன்னால் பெரும் அதிர்ச்சிதான் ஏற்படுத்தும்.

காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி — திருமால்பூர் இடையே 1,071 வருடங்கள் பழமையான பெருமாள் உய்ய கொண்ட ஆழ்வார் என்ற கோவில் இருந்தது. இந்த கோவில், இந்திய தொல்லியல் துறைக்கும் தெரியாமல் இருந்தது வருத்தம் அளிக்கிறது. 40 வருடங்களுக்கு முன்பு, கோவிந்தவாடி பகுதி மக்கள், இந்த கோவிலுக்கு வந்துதான், வழிபட்டு வந்துள்ளனர். அந்த கோவிலைதான் திருடிவிட்டனர். கோயில் திருடப்பட்டு காணாமல் போனது, வைணவ ஜீயர்களுக்கும் தெரியாமல் இருந்தது வருந்தத்தக்கதாக உள்ளது.

இந்த பெருமாள் கோவில் திருடப்பட்டு, அதன் விளைவாக, அனுமன் சிலையும் காணாமல் போயுள்ளது. திருடு போன விபரம் குறித்து, 40 வருடங்களாக சட்டப்படி பதிவு செய்யவில்லை. உண்மையான குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்காமல் இருப்பதற்கு சாதகமாக, அறநிலையத்துறை செயல்பட்டுள்ளது தெரிய வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில், பொன். மாணிக்கவேல் எழுத்து மூலமாக புகார் ஒன்றையும் அளித்தார். அதில், “காஞ்சிபுரத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் திருமால்புரம் அருகில் உள்ள கோவிந்தவாடி கிராமத்தில் 1,071 வருடம் தொன்மையான ‘நின்று அருளின பெருமாள் உய்யக்கொண்ட ஆழ்வார்’ பெருமாள் கோயில் இருந்தது. சுமார் 40 வருடங்களுக்கு முன் கோவிந்தவாடி கிராமத்தில் அன்றாடம் மக்கள் வழிபாட்டிலிருந்த இப் பெருமாள் கோயில் முற்றிலும் களவாடப்பட்டு அதன் விளைவாக நம் மண்ணிலிருந்து மறைந்து போயிருக்கிறது.

கோவிந்தவாடி கிராமத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திருமால்புரத்தில் மணிகண்டேஸ்வரர் சிவன் கோவில் இன்றும் உள்ளது. சுமார் 30 வருடத்திற்கு முன்னாள் மணிகண்டேஸ்வரர் சிவன் கோயில் நகரத்தார் என்ற நாட்டுக் கோட்டை செட்டியார்களால் திருப்பணி செய்யப்பட்டது. அதே காலத்தில் நின்று அருளின பெருமாள் உய்யக் கொண்ட ஆழ்வார் கோவிலில் திருப்பணி நடந்தது. இவ்விரு கோயில்களும் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில்தான் இருந்தன. ‘நின்று அருளின பெருமாள் உய்யக் கொண்ட ஆழ்வார்’ கோயிலில் திருப்பணி என்ற பெயரில் கோயிலில் உள்ள அனைத்து கல் மற்றும் செப்பு தெய்வ திருமேனிகளும் மற்றும் கல்வெட்டுகள் அடங்கிய கல்தூண்களும் கல் பலகைகளும் கோயிலில் இருந்து, அன்றைய தினம் பணியிலிருந்த அறநிலையத்துறை நிர்வாகிகளால் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்றும், அதற்குப் பிறகு என்றுமே திரும்பி வரவில்லை என்றும் கிராமத்தைச் சேர்ந்த முதியோர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இக்கோயிலின் மூலவர் ‘நின்று அருளின பெருமாள் உய்யக் கொண்ட ஆழ்வார்’ களவாடப்பட்டு காணாமல் போய்விட்டது. இக்கோயிலின் அடித்தளம் களவாடப்பட்டு காணாமல் போய்விட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட கல் தெய்வ திருமேனிகளும், மேலே சொல்லப்பட்ட மணவாள பெருமாள் (உற்சவர்) மற்றும் அனுமன் (உற்சவர்) ஐம்பொன் தெய்வ திருமேனிகளும் திருப்பணி என்ற அடிப்படையில் களவாடப்பட்டு அதன் விளைவாக மறைந்து போய் விட்டது. இந்த குற்றத் தகவலை அன்றிலிருந்து நேற்று வரையிருந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தகவல் கொடுக்காமல், அவ்வாறு செய்வது சட்டபடி தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிந்திருந்தும் தங்களது சட்ட கடமையை செய்யாமல் தவிர்த்திருக்கிறார்கள்.

இதில் உள்ள அனுமன் திருமேனி உள்ளிட்டவை அமெரிக்காவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் சென்னையைச் சேர்ந்த பிரபல சிலைக்கடத்தல் குற்றவாளிகள் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த சென்னையில் உள்ள ஒரு பெண் குற்றவாளி வீடுகளிலிருந்து, 2016-ம் ஆண்டிலிருந்து 2018-ம் ஆண்டு வரை கைப்பற்றப்பட்ட 1000-க்கும் மேற்பட்ட தொன்மையான கல் தெய்வ திருமேனிகளுக்கும், பஞ்சலோக திருமேனிகளுக்கும், இந்த கோயிலிருந்து களவாடபட்ட கல் தெய்வ திருமேனிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்று முதலில் கண்டறிய வேண்டும்.

சிலைத்திருட்டு தடுப்பு பிரிவு ஏடிஜிபி, டிஜிபி போன்ற அதிகாரிகள் இந்த வழக்கின் புலன் விசாரணை பொறுப்பை தாங்களே கையில் எடுத்து கொண்டு விசாரணை செய்ய வேண்டும். அப்படி நடக்காத பட்சத்தில், இத்தகைய மிக பெரிய கலாச்சார பொக்கிஷ குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் எள் அளவு கூட முன்னேற்றம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தில் இருக்காது என்பது நிச்சயம்” என்று அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஐஜியே கோயிலை காணவில்லை என்று போலீசில் புகார் தந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.