சுயமரியாதை இழந்த கட்சியாக திமுக உள்ளது: நத்தம் விஸ்வநாதன்!

சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு, சுயமரியாதை இழந்த கட்சியாக திமுக உள்ளதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.

உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள அதிமுக, வாரிசு அரசியல் காரணமாகவே உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளதாகக் கூறி வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கு முடிசூட்டு விழா நடைபெறுவதாகவும் அவர் அமைச்சரானால் தமிழகத்தில் தேனாறும், பாலாரும் ஓடப் போகிறதா என்றும் எதிர்க்கட்சி கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகச் சாடியிருந்தார். இதற்கிடையே முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் இந்த விவகாரத்தில் திமுகவை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

சென்னை செல்வதற்காகத் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த அதிமுக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திமுக ஆட்சியில் ஆவின் விலை உயர்வு மட்டும் இல்லை, அனைத்து பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. ஆவின் பால், நெய், வெண்ணெய் என வரிசையாக விலையை உயர்த்தியே வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் வரியைக் குறைப்போம்.. வசதியைப் பெருக்குவோம் என்று வசனம் பேசினார்கள். ஆனால், இப்போது ஆட்சிக்கு வந்தவுடன் என்ன செய்கிறார்கள்? வரியைக் குறைக்க வேண்டாம். ஆனால் குறைந்தது வரி மற்றும் கட்டணங்களை உயர்த்தாமல் இருந்திருக்கலாம்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் தமிழகம் மின்சாரத்துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறியது. ஜெயலலிதா ஆட்சியில் தான் இது சாத்தியமானது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த இன்றைய முதல்வர் ஸ்டாலின், பொதுவாக மின்சாரத்தைத் தொட்டால் தான் ஷாக் அடிக்கும். ஆனால், அதிமுக ஆட்சியில் மின் கட்டணத்தைப் பார்த்தாலே ஷாக்கடிக்கிறது என்று ஏக வசனம் பேசினார். ஆனால், இன்று அவரது ஆட்சியிலேயே மின்சார கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் 6% வரை மின் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளனர். திமுக ஆட்சிக்கு திமுக அரசே முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் ஆட்சி மாற்றம் நடக்கும்.

கொரோனா காலத்திலும் கூட அதிமுக அரசு பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் மக்களுக்குக் கொடுத்தோம். அப்போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் ரூ.5000 கொடுக்க வேண்டும் எனச் சொன்னார். ஆனால், இப்போது முதல்வரான பிறகு 5000 ரூபாய் தர வேண்டாம். அதிமுக ஆட்சியில் கொடுத்த போல ரூ. 2500 கொடுத்தாலே போதும். ஆனால் அதைக் கூட அவர்கள் செய்வதில்லை. பொங்கல் தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கி வருகின்றனர். இதைத் தமிழக மக்களே ஏளனம் செய்தனர். இது அனைவருக்கும் தெரியும்.. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஸ்டாலின் பல விஷயங்களைக் கூறினார். இப்போது ஆட்சியில் உள்ள அவர், இதையெல்லாம் நிறைவேற்ற வேண்டும்.

வாரிசு அரசியல் என திமுகவை எவ்வளவு விமர்சனம் செய்தாலும் இன்பநதிக்கு கூட கொடி பிடிப்போம் என்கிறார் கே.என்.நேரு.. தன்மானம் இல்லாத கட்சியாகவே திமுக உள்ளது.. சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு சுயமரியாதை இழந்த கட்சியா திமுக இருக்கிறது.. உதயநிதி மகனுக்கும் கொடி பிடிப்போம் எனச் சொல்லுகிற அளவிற்குத் தன்மானம் இல்லாத, சுயமரியாதையை இழந்த இயக்கமாக இன்று திமுக இருக்கிறது. ஆனால் அவர்கள் சுயமரியாதையின் சுடரொளி எனத் தப்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். மக்கள் இதைப் பார்த்துக் கொண்டு சிரிக்கவே செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.