இந்திய கலாசார பெருமையை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி பெரும் முயற்சி: அமித் ஷா

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வாயிலாக, இந்திய கலாசார பெருமையை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி பெரும் முயற்சி எடுத்துள்ளார் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், நவ., 17ல் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தமிழகத்தில் இருந்து துறைவாரியான வல்லுனர்கள் மற்றும் மாணவர்கள் 2,500 பேர் பங்கேற்றனர். ஒரு மாதம் கோலாகலமாக நடந்த ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி நேற்று நிறைவு பெற்றது. வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் பல்கலை மைதானத்தில் நடந்த நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:-

நம் நாட்டின் ஒற்றுமைக்கு அடிப்படையே நம் கலாசாரம் தான். வாரணாசியில் ஒரு மாதமாக நடந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வாயிலாக, நம் நாட்டின் கலாசார பெருமையை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி பெரும் முயற்சி எடுத்துள்ளார். சுதந்திரத்துக்குப் பிறகும் நம் கலாசாரத்தை, ஒற்றுமையை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகள் நடந்துள்ளன. பிரதமர் தற்போது எடுத்துள்ள கலாசார இணைப்பு முயற்சி, நாடு சுதந்திரம் அடைந்தவுடனேயே எடுத்திருக்க வேண்டும். ஆனால், இதற்கு முன் இருந்த ஆட்சியாளர்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை.

பல்வேறு கலாசாரம், மொழிகள், பேச்சு வழக்குகள் மற்றும் கலைகளால் உருவானதே இந்திய நாடு. ஆனால், அதன் ஆன்மா ஒன்று தான். தமிழ் மிகவும் பழமையான மொழி. தமிழகத்தில் இருந்து வந்த சகோதர, சகோதரிகளுக்கு காசி மக்கள் மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தனர். காசியைப் பற்றிய நினைவுகளை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இந்ந நிறைவு நிகழ்ச்சியில், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷண் ரெட்டி, எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.