பிரதமர் நரேந்திர மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவுக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, காஷ்மீர் விவகாரம் குறித்து எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், “அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய அல் குவைதா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள், இந்திய பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தியவர்கள், பயங்கரவாதம் குறித்து இந்த கவுன்சிலில் பிரசங்கம் செய்வதற்கு என்ன தகுதி இருக்கிறது” என, கடுமையாக சாடினார்.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் கருத்துக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, பிரதமர் நரேந்திர மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சித்து உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பிலாவல் பூட்டோ கூறுகையில், “ஒசாமா பின்லேடன் இறந்து விட்டார். ஆனால், குஜராத் கசாப்பு கடைக்காரர் வாழ்கிறார். அவர் இந்தியாவின் பிரதமராக உள்ளார். அவர் (பிரதமர் மோடி) அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. அவரும், வெளியுறவுத் துறை அமைச்சரும் (ஜெய்சங்கரும்) ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள்,” என கூறினார்.
பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும், மத்திய அமைச்சர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லக்வி, ஹபீஸ் சயீத், மசூத் அசார், சாஜித் மிர், தாவூத் இப்ராகிம் போன்ற பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்து, ஒசாமா பின்லேடனை தியாகி என்று போற்றும் நாடு பாகிஸ்தான். மேக் இன் பாகிஸ்தானின் பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி கூறுகையில், “பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பயன்படுத்தும் மொழி, அவர் திவாலான நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், அவர் மனதளவிலும் திவாலானவர் என்பதைக் காட்டுகிறது. அவர் ஒரு தோல்வியடைந்த அரசின் பிரதிநிதி. பயங்கரவாத மனநிலை கொண்டவர்களிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்க முடியும்?” என தெரிவித்து உள்ளார்.