ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக ஈரான் நாட்டின் பிரபல நடிகை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரானில் 9 வயது சிறுமி முதல் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், டெக்ரான் பகுதியிலிருந்த சில பெண்கள் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்பதற்காக, போலீசார் அவர்களை தாக்கினர். அதே போல மாஷா அமினி என்ற பெண் அணிந்திருந்த முக்காடு கழண்டு விட்டதால், போலீசார் அவரை தாக்கினர். இதனால் 22 வயதே ஆன இளம்பெண் கோமா நிலைக்கு சென்று செப்டம்பர் 17ந் தேதி உயிரிழந்தார். மாஷா மீதான வன்முறையை கண்டித்து ஈரான் முழுவதும் பல பெண்கள் கட்டாய ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும், தலைமுடியை வெட்டியும் அவர்கள் போராடுகின்றனர். செப்டம்பர் 20ந் தேதி டெக்ரானில் நடந்த மிகப்பெரிய போராட்டத்தில் போது 17 வயது சிறுமி நிகா ஷகராமி காணாமல் போனார். சில நாட்களுக்குப் பின், அவர் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் மரணத்துக்குக் காரணம், அங்கிருந்த மதகும்பல் தான் என்று ஈரானிய அரசு தரப்பிலும், பாதுகாப்புப்படையினர் தான் காரணம் என்று போராட்டக்காரர்களும் கூறி வருகிறது. ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில், மீண்டும் ஒரு சிறுமியின் மரணம் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கி உள்ளது.
இந்நிலையில், ஈரான் நாட்டின் பிரபல நடிகையான தாரனே அலிதூஸ்டி நாட்டை பற்றி பொய்யான தகவலை பரப்பியதற்கான நேற்று ஈரான் போலீசார் அவரை கைது செய்தனர். நடிகை தாரனே அலிதூஸ்டி, கடந்த வாரம் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ஹிஜாப் போராட்டத்தில் ஈடுபட்டுபட்டவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவினை பகிர்ந்து இருந்தார். அந்த பதிவில் இந்த இரத்தக்களரியை பார்த்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் ஒவ்வொரு சர்வதேச அமைப்பும் மனிதகுலத்திற்கு அவமானம் என்று எழுதினார்.
இதுகுறித்து, மாநில செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ இதற்குரிய ஆவணத்தை சமர்ப்பிக்குமாறு கூறியிருந்தது. ஆனால், ஆவணங்களை வழங்கத் தவறியதால், காவல்துறையினர் அவரை கைது செய்தனர். 38 வயதான நடிகை தாரனே அலிதூஸ்டி 2016ம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்ற தி சேல்ஸ்மேன் திரைப்படத்தில் நடித்தன் மூலம் பிரபலமானார். எட்டு மில்லியன் பாலோவர்களை கொண்ட இவரது இன்ஸ்டாகிராம் கணக்கையும் போலீசார் முடக்கி உள்ளனர்.