உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை அர்ஜென்டினா வென்றது.
உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்றது. உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி ஹூகோ லோரிஸ் தலைமையிலான பிரான்சை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியது முதல் பரபரப்பு பற்றிக்கொண்டது. சுமார் 90 ஆயிரம் ரசிகர்கள் குவிந்திருக்க போட்டி தொடங்கியதுமே மைதானம் அதிர்ந்தது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சி, இணையதளத்தில் போட்டியை கண்டுகளித்தனர். ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திய அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி அபாரமான கோல் அடித்தார். மெஸ்சியின் கோலால் உலகம் முழுவதும் இருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் ஏஞ்சல் டி மரியா கோல் அடித்தார். இதனால், அர்ஜென்டினாவின் கோல் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜென்டினா 2 கோல்கள் அடித்ததால் உலகம் முழுவதும் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
பின்னர், ஆட்டத்தின் 2-வது பாதி தொடங்கியது. ஆட்டம் தொடங்கியது முதல் பிரான்ஸ் வீரர்கள் ஆட்டத்தின் வேகத்தை கூட்டினர். அப்போது, ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் பிரான்சுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை அபாரமாக பயன்படுத்திய பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாபோ கோல் அடித்தார். இதனால், பிரான்ஸ் அணி தனது முதல் கோலை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து ஆட்டம் சூடுபிடிக்க அடுத்த நிமிடமான 81-வது நிமிடம் பிரான்ஸ் 2-வது கோல் அடித்தது. சில கால்களை சுற்றிக்கொண்டு பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாபோ பக்கம் வந்த பந்தை அவர் கோலாக மாற்றினார். 80 மற்றும் 81 என்ற அடுத்தடுத்த நிமிடங்களில் எம்பாபோ அடித்த 2 கோல்கள் அந்த நிமிடத்தில் கால்பந்து ரசிகர்களின் இதயத்துடிப்பையே நிறுத்திவிட்டது என்று கூறலாம். இதனால், பிரான்ஸ் அணியின் கோல் எண்ணிக்கையும் 2 ஆக உயர்ந்தது. அர்ஜென்டினா முதல் பாதியில் 2 கோல்கள் அடித்த நிலையில் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் அடுத்தடுத்த நிமிடங்களில் 2 கோல்கள் அடித்து உலக கால்பந்து ரசிகர்களுக்கு விருந்தாக்கியது. 2-2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையில் இருந்ததால் ஆட்டம் சூடுபிடித்தது.
மைதானத்தில் இருந்த வீரர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களுக்கு பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து, இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால், யாராலும் கோல் அடிக்கமுடியவில்லை. வழக்கமான 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. இதனால், தலா 15 நிமிடங்கள் வீதம் மொத்தம் 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் ஆட்டம் சூடுபிடித்த நிலையில் 107-வது அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்சி கோல் அடித்து உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினார். அந்த கோல் மூலம் அர்ஜென்டினா 3-2 கோல் கணக்கில் முன்னிலைக்கு வந்தது. இதனால், கோப்பை அர்ஜென்டினாவுக்கு தான் என ரசிகர்கள் எண்ணினர். ஆனால், ஆட்டம் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் 118-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திய பிரான்ஸ் வீரர் எம்பாபோ கோல் அடித்தார். இதனால், பிரான்ஸ் அணியின் கோல் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது. பின்னர், இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சித்த போதும் அது முடியாமல் போனது. கூடுதல் நேரத்துடன் சேர்ந்த்து மொத்தம் 125 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டம் 3-3 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதனால், ஆட்டத்தின் முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கொண்டுவரப்பட்டது.
5 வாய்ப்புகளில் யார் அதிக கோல் அடிக்கிறார்களோ அவர்கள் வெற்றிபெற்றவர்கள் என்று அறிவிக்கப்படுவர். அதன்படி, பெனால்டி ஷூட்-அவுட் முறையில் முதல் வாய்ப்பு பிரான்சுக்கு வழங்கப்பட்டது. அதில், பிரான்ஸ் வீரர் எம்பாபோ முதல் கோல் அடித்தார். அவருக்கு அடுத்து அர்ஜென்டினா வீரர் மெஸ்சிக்கு பெனால்டி ஷூட்-அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில், மெஸ்சி அபாரமாக கோல் அடித்தார். இதனால், 1-1 என்று கோல் சமநிலையில் இருந்தது. பின்னர், 2-வது பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரான்ஸ் வீரர் கிங்ஸ்லி கொமன் கோல் வாய்ப்பை தவறவிட்டார். ஆனால், 2-வது பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திய அர்ஜென்டினா வீரர் பாலோ டெபலா கோலாக மாற்றினார். இதனால், 2-1 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினா முன்னிலைபெற்றது. 3-வது பெனால்டி ஷூட்-அவுட் வாய்ப்பையும் பிரான்ஸ் வீரர் தவறவிட்டார். ஆனால், அர்ஜென்டினா வீரர் லிண்டிரோ கோலாக மாற்றினார். இதனால், 3-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. பின்னர், 4-வது பெனால்டி ஷூட்-அவுட் வாய்ப்பை பிரான்ஸ் வீரர் ரண்டல் கோலாக மாற்றினார். இதனால், பிரான்ஸ் 2 கோல்களுடனும் அர்ஜென்டினா 3 கோல்களுடனும் இருந்தன. அடுத்த வாய்ப்பு அர்ஜென்டினாவுக்கு கிடைத்தது. இந்த வாய்ப்பில் கோல் அடித்தால் கோப்பையை வெல்லலாம் என்ற உச்சபட்ச பரபரப்புடன் அர்ஜென்டினா வீரர் மொண்டியல் களத்திற்கு வந்தார். அவர் தனக்கு கிடைத்த பெனால்டி ஷூட்-அவுட் வாய்ப்பை கோலாக மாற்றினார். இதன் மூலம் அர்ஜென்டினா 4 கோல்கள் அடித்தது. இதனால், 4-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற அர்ஜென்டினா அபார வெற்றிபெற்றது. பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சம்பியனானது. லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி உலக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தது. இதையடுத்து, அர்ஜென்டினாவுக்கு உலகக்கோப்பையும், பதக்கம், பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
உலகக்கோப்பையை அர்ஜென்டினா கேப்டனும் நட்சத்திர வீரருமான மெஸ்சி பெற்றுக்கொண்டார். கோப்பையை பெற்ற மெஸ்சி தனது அணி வீரர்களுடன் சேர்ந்து உற்சாகமாக கொண்டாடினார். பெனால்டி ஷூட்-அவுட் முறையில் அர்ஜென்டினா வெற்றிபெற்றதை உலகம் முழுவதிலும் இருந்த கால்பந்து ரசிகர்கள் கொண்டாடினர். உலகக்கோப்பை கால்பந்து கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினாவுக்கும், மெஸ்சிக்கும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை வெல்வது இது 3-வது முறை ஆகும். இதற்கு முன் 1978 மற்றும் 1986-ம் ஆண்டுகளில் கோப்பையை அர்ஜென்டினா வென்றுள்ளது. இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பின் அர்ஜென்டினா மீண்டும் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் கோப்பையை வெல்லவேண்டும் என்ற லியோனல் மெஸ்சியின் கனவு நனவானது. அர்ஜென்டினா வெற்றி, மெஸ்சி கோப்பையை கைப்பற்றியதை உலகம் முழுவதிலும் இருந்த கால்பந்து ரசிகர்கள் கொண்டாடினர்.