உலக பேரழிவை தடுத்தவர் பிரதமர் மோடி: அமெரிக்க சிஐஏ!

உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் மோடியின் கருத்துகள் மிகப் பெரிய பேரழிவைத் தடுத்துள்ளதாக அமெரிக்கா சிஐஏ இயக்குநர் கூறியுள்ளார்.

கடந்த பிப். மாதம் தொடங்கிய உக்ரைன் போர் பல மாதங்களாகத் தொடர்ந்து வருகிறது. முதலில் சில மாதங்களில் மட்டுமே போர் முடிந்துவிடும் என்றே பலரும் நினைத்த நிலையில், மாதக்கணக்கில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போதும் கூட போர் முடிவுக்கு வர எந்தவொரு அறிகுறியும் தெரியவில்லை. இந்தப் போரால் உக்ரைன், ரஷ்யா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் பல்வேறு உலக நாடுகளும் கூட ஈடுபட்டுள்ளன. இருந்த போதிலும், யாராலும் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை. இதற்கிடையே போரில் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் எனத் தகவல் வெளியானது. அதாவது போரில் ரஷ்யப் படைகளின் செயல்பாடுகளால் புதின் அதிருப்தியில் உள்ளார். இப்போது போரை முடிவுக்குக் கொண்டு வந்தால், தனக்கு அவமானம் என நினைக்கிறார். இதனால் அவர் போரில் வெல்லக் குறைந்த அளவு அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடும் எனச் சொல்லப்படுகிறது. ஏன் ஆபத்து குறைந்த அளவு என்றாலும் கூட அது நிச்சயம் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. அணு ஆயுத பாதிப்பு அண்டை நாடுகளுக்கும் பரவ வாய்ப்புகளும் உள்ளது.

ரஷ்யாவிடம் இப்போது இருக்கும் 46,000 டன்கள் அணு ஆயுதங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. ரஷ்யாவிடம் இருக்கும் ஏவுகணைகளைக் கொண்டு 12,000 கிலோமீட்டர்கள் வரை எடுத்துச் சென்று தாக்க முடியும். அதாவது ஒட்டுமொத்த ஐரோப்பாவில் எங்கு நினைத்தாலும் தாக்கம் முடியும். அதேபோல அமெரிக்காவையும் கூட தாக்க முடியும். இதனால் அணு ஆயுத பயன்படு முக்கிய அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டது.

இதற்கிடையே இது தொடர்பாகச் சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதின் பேசியதும் சர்ச்சையானது. இது குறித்து புதின் கூறுகையில், “ரஷ்யா தனது மக்களைக் காப்பாற்ற தன்னிடம் உள்ள அனைத்து வழிகளிலும் நிச்சயம் போராடும். எங்களிடம் உள்ள அணுஆயுதங்கள் பதற்றத்தை அதிகரிக்காது பதற்றத்தைத் தடுக்கவே செய்யும். ஏனென்றால் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதியின் மீது தாக்குதல் நடந்தால், பிறகு அதற்கேற்ப பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும்” என்று கூறியிருந்தார். புதினின் இந்தப் பேச்சு சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியது. உக்ரைன் போரில் ஒரு அட்வான்டேஜ் கிடைக்க வேண்டும் என்பதற்காக புதின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த முடிவெடுத்துள்ளதாகக் கூறப்பட்டது. இது சர்வதேச அளவில் மிகப் பெரியளவில் பேசுபொருளானது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த விவகாரத்தில் கவலை தெரிவித்தன.

இந்தச் சூழலில்தான் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் முடிவில் இருந்து மாறியுள்ளதாகவும் இதற்குப் பிரதமர் மோடியும் ஒரு காரணம் என்று அமெரிக்க சிஐஏ புலனாய்வு பிரிவு இயக்குநர் தெரிவித்துள்ளார். அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கள் ரஷ்யா மீது தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் இது உக்ரைன் போரில் உலகளாவிய பேரழிவு ஏற்படுவதைத் தவிர்த்துள்ளதாகவும் சிஐஏ இயக்குநர் பில் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்தும் தங்கள் கவலைகளை எழுப்பியிருந்தனர். இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றே நான் நினைக்கிறேன். இது ரஷ்யா மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நான் நினைக்கிறேன். இப்போது சும்மா மிரட்டுவதற்கு மட்டுமே அவர்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்துப் பேசி வருகிறார்கள். இன்னுமே கூட போரில் அட்வான்டேஜ் கிடைக்க அவர்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் திட்டத்தை வைத்துள்ளதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

அதாவது இந்தியப் பிரதமர் மோடியின் கருத்து என்பது பெரிய அபாயம் ஏற்படுவதில் இருந்து தவிர்த்துள்ளது. இந்தியா உக்ரைன் போர் தொங்கியது முதலே போரைத் தவிர்த்து அமைதியான முறையில் பிரச்சினைகளைப் பேசி முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஷாங்காய் உச்சி மாநாட்டில் புதினை சந்தித்த போதும், “இந்த நூற்றாண்டு போருக்கானது இல்லை” என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இதை அமெரிக்கா ஊடகங்களே பாராட்டியிருந்தது. அதேபோல சில நாட்களுக்கு முன்பு புதினுடன் தொலைப்பேசி வாயிலாகப் பேசிய போதும், போரைப் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வர மோடி வலியுறுத்தியிருந்தார்.