ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத சம்பவங்கள் 168% குறைந்தன என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி அரசு கடைபிடிக்கும் அணுகு முறையால் 2014 முதல் ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதம் 168% குறைந்துள்ளது. உரி தாக்குதலுக்கு எதிராக 2016-ம் ஆண்டு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது. 2019-ம் ஆண்டு நிகழ்ந்த புல்வாமா குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் கலவரத்தின் மூலமாக நிகழும் வன்முறைகள் 80 சதவீதம் குறைந்துள்ளது.
சமூக நலன் என்ற சாக்குப்போக்கில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பை தடை செய்ய மோடி அரசாங்கம் தயங்கவில்லை. தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ் வடகிழக்கு மாநிலங்களில் அமைதிக்கான புதிய சகாப்தம் தொங்கியுள்ளது. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு வடகிழக்கில் அமைதியின் சகாப்தம் தொடங்கியதாகவும், 80 சதவீதம் வன்முறைகள், பொதுமக்கள் இறப்பு 89 சதவீதம் குறைந்துள்ளது, 2014க்கு பின்னர் 6,000 தீவிரவாதிகள் சரணடைந்துள்ளனர்.
இந்த மண்டலங்களில் அமைதியை நிலைநாட்ட 2020-ம் ஆண்டு போடோ ஒப்பந்தம், 2021-ம் ஆண்டு கர்பி அங்லாங் ஒப்பந்தம், 2022-ம் ஆண்டு அசாம் – மேகாலயா இடையிலான எல்லைப் பிரச்சினை தொடர்பான ஒப்பந்தம் என பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்ட விவகாரத்தில் 94% பேருக்கு தண்டனை பெற்று தந்திருப்பதாக விளக்கம் அளித்தார். இதற்கு இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தங்களே காரணம் என்றார். பயங்கரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் கைவிடாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.