முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் ரூ.14 கோடியில் வாட்ச் அணிவதாக திமுகவை அண்ணாமலை அதிர வைத்துள்ளார்.
திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் பள்ளிகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாற்றுக் கட்சிகளில் இருந்து புதிய உறுப்பினர்கள் இணையும் விழா, புதிய உறுப்பினர்கள் தேசிய நீரோட்டத்தில் இணையும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி, மதுவால் கணவனை இழந்த பெண்களுக்கு நிதி உதவி வழங்கினார். இதனைத் தொடர்ந்து விழாவில் அண்ணாமலை பேசியதாவது:-
இந்த வாட்ச்க்கு பில் மட்டும் இல்லை. 13 ஆண்டுகள் நான் போலீசாக இருந்து சம்பாதித்தது முழுமையும் கணக்கு கொடுக்கிறேன். எனக்கு 80 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை சம்பளம் வந்துள்ளது. இன்னும் கணக்கு பார்க்கவில்லை. 25 லட்சம் கிரெடிட் கார்டு பில் கட்டி உள்ளேன். தனி வலைதளத்தில் முழுமையாக வெளியிடுகிறேன். ஏப்ரல் மாதம் பிரஸ் மீட்டில் திமுக, முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை பினாமி சொத்து கணக்கை வெளியிடுகிறேன்.
இவர்கள் 2 லட்சம் கோடி ரூபாய் சொத்து சேர்த்து உள்ளனர். இரண்டு தலைமுறை வளர்ச்சிக்கான தொகையை ஊழல் செய்துள்ளனர். திருப்பூர் வளர எந்த அரசியல்வாதியும், கட்சியும் காரணம் இல்லை. இது மக்களின் உழைப்பால் வளர்ந்தது. இங்கு நிர்வாகிகள் பேசும்போது, உங்களுக்கும், எம்ஜிஆருக்கும் ஒற்றுமை உள்ளது என்றனர். எம்ஜிஆரையும் என்னையும் ஒன்று என சொன்னார்கள். நான் அந்த ஒப்பீடு வேண்டாம் என்கிறேன். ஆனால் அப்போது திமுக எம்ஜிஆரை கிண்டல் செய்தது வாட்ச்சை வைத்து தான். அதில் வைரம் உள்ளது. ஒட்டு கேட்க முடியும் என பரப்பினர். இப்போது என்னையும் அதே வாட்ச் வைத்து கிண்டல் செய்கின்றனர். இது நமக்கு ஒரு வாய்ப்பு. ஊழலை பற்றி பேச. மு.க.ஸ்டாலின் 120 கோடி வீடு எப்படி வந்தது? என கேட்போம்.
இந்தியாவில் ஊழலில் நம்பர் ஒன் தமிழ்நாடு. சாராய அமைச்சருக்கு வழக்கில் ஆஜராகும் வக்கீலுக்கு ஒவ்வொரு முறையும் 25 லட்சம் ரூபாய் சம்பளம். அது எங்கிருந்து வந்தது. ஊழல்.. இது தான் தமிழகத்தின் நிலையாக இருந்தது. ஆவின் பால் விலை உயர்வால் ஆரஞ்ச் பால் பாக்கெட் 5 லட்சம் லிட்டர் விற்பனை குறைந்துள்ளது. ஆரஞ்சு பால் பாக்கெட்டில் தான் புரதச்சத்து உள்ளது. மக்கள் அதிகமாக வாங்கும் பால் விலை உயர்வால் குழந்தைகளின் புரதச்சத்து குறைகிறது. எதிர்காலம் பாதிக்கப்படும். இந்த விலையேற்றம் மூலம் தனியாருக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து உள்ளனர்.
பட்டத்து இளவரசருக்கு பட்டாபிஷேகம் செய்துள்ளனர். அமைச்சர் பதவி ஏற்பதற்கு முன்பாகவே இரண்டு ஐ.ஏ.எஸ்களை நியமித்து அறையை தயார் செய்கிறார்கள். சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும். சரக்கு இருக்கிறதா? இல்லையா என 2 வருடத்தில் மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள்.
2024 தேர்தலில் திருப்பூரில் இருந்து பாஜக எம்பி வர வேண்டும். பாஜக எம்பி இல்லாததால் திருப்பூர் வளரல. இங்கு எம்பி இருந்திருந்தால் இன்னும் வளர்ந்திருக்கும். 50 ஆயிரம் கோடி ஏற்றுமதியை 5 லட்சம் கோடியாக மாற்ற முயற்சி எடுத்திருக்கலாம்.
தமிழக முதல்வர் முதல் எம்எல்ஏ, அமைச்சர் என 2 லட்சம் கோடி சொத்து பட்டியல் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும். முதலமைச்சரின் வேலை என்பது 5 மாவட்டங்களுக்கு சென்று ரிப்பன் வெட்டுவது அல்ல.
அதற்கு ஐஏஎஸ் அலுவலர்கள் உள்ளனர். பத்தாயிரம் சம்பாதிக்கக்கூடிய ஏழையின் வருமானத்தை 15 ஆயிரமாக எப்படி உயர்த்துவது என்பதே முதல்வரின் வேலையாக இருக்க வேண்டும். அப்படி பார்த்தால் பாரதப் பிரதமர் 5 மாநிலங்களில் திட்டங்களுக்கான ரிப்பனை வெட்டுகிறார். ரிப்பன் வெட்டுவதை வைத்து ஒப்பிடக் கூடாது. டாஸ்மாக் மதுபான கொள்முதலில் மாதத்திற்கு 62 லட்சம் கேஸ் மதுவில் 32 லட்சம் கேஸ் மது திமுகவினரின் சாராய ஆலைகளில் இருந்து வருகிறது.
திமுக அமைச்சர் நேரு ஒரு மேடையில் பேசுகிறார். இன்பநிதி வந்தாலும் நாங்கள் ஆதரிப்போம் என பேசுகிறார். நீங்கள் அடிமைகளாக இருங்க. மக்கள் ஏன் அடிமையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் ஆட்சிக்கு வந்ததும் முதல் நான்கு ஆண்டுகள் ஊழல் செய்ய வேண்டும். கடைசி ஆறு மாதங்கள் அறிக்கைகள் விட வேண்டும். அதன் பின் பேசாமல் இருக்க வேண்டும் என உள்ளனர். ஆனால் பாஜக கேள்வி கேட்கிறது. இதுவரை யாரும் கேட்கவில்லை. அதனால் என் மீது திமுகவினருக்கு கோபம் உள்ளது. அதேப் போல் முதல்வரின் மருமகன் ரூ.14 கோடி வாட்ச் கட்டுகிறார். இது போன்ற பட்டியல் ஏப்ரலில் வெளியாகும்போது ஆழமானதாகவும், காரமாகவும் இருக்கும். மக்கள் நேர்மையின் பக்கம் இருப்பார்கள். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.