தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுமென்றே பிதற்றுகிறார்: திருமாவளவன்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறியாமையில் பேசுகிறாரா; வேண்டுமென்றே பிதற்றுகிறாரா தெரியவில்லை என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி – கிறித்துவ சமூக நீதிப் பேரவை கொண்டாடும் கிறித்துவப் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி கலந்து கொண்டு பேராயர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் பேராயர்கள் ஒன்று கூடி கேக் வெட்டி கிறிஸ்மஸ் விழாவை கொண்டாடி சிறப்பித்தார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினரும் கிறிஸ்தவ நல்லென்ன இயக்க தலைவருமான இனிகோ இருதயராஜ், விஜிபி சந்தோசம், சிறுவர்கள், விசிகவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-

யேசு பெருமான் பிறக்கும் போது யூத குடியில் பிறந்தவர். உலகை வழிநடத்த ஒரு பாதை வகுத்தவர். அவருடைய போதனைகள் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. கிறிஸ்தவம், இஸ்லாமிய மதத்திற்கு முன்பே இந்து மதம் தோன்றியது என சனாதனவாதிகள் சொல்கிறார்கள். ஆனால் அது இந்தியாவை தாண்டி வேறு ஒரு நாட்டில் பரவவே இல்லை. ஆனால் கிறிஸ்தவம் 200 நாடுகளில் பரவி இருக்கிறது. சகோதரத்துவத்தை சமத்துவத்தை போதிக்கிற மதம் இஸ்லாமியமும், கிறிஸ்துவமும். அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் கிறிஸ்தவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது தான் என சிலர் பேசினார்கள். கிறிஸ்துவம் என்பது ஆன்மீகத்தை மட்டும் இல்லாமல் சகோதரத்துவத்தை போதிக்கிறது. சாதி, மதம், நாடு என வேற்றுமை பார்க்காமல் அவர்கள் நலனுக்காக ஜெபிக்கக் கூடிய நாகரீகத்தை வளர்த்து இருக்கிறது. 2000 ஆண்டுகளில் 200 நாடுகளில் கிறிஸ்தவம் பரவி வருகிறது. கிறிஸ்துவம் வந்த பிறகு தான் இருண்டு கிடந்த இந்தியாவில் வெளிச்சம் பிறந்தது.

இந்தியாவில் காலடி எடுத்த வைத்த பிறகு தான் கல்வி, மருத்துவம், சுகாதாரம் கிடைத்தது. சகோதரத்துவம், சுதந்திரம் கிடைத்தது. கிறிஸ்தவம் வந்த பிறகு தான் பள்ளிக்கூடம், மருத்துவமனை வந்தது. பழைய சட்டங்கள் தூக்கி எறியப்பட்டன; புதிய சட்டங்கள் உருவாகின. இதனால் தான் சனாதனிகளுக்கு இஸ்லாமியம் மீதும், கிறிஸ்தவம் மீதும் கோபம் வருகிறது. சமூக ஒழுங்கை ஒட்டுமொத்தமாக புரட்டி போடும் வகையில் பிரிட்டீஷ் ஆட்சி இருந்தது. அதனால் இன்றும் அவர்கள் பதறிக் கொண்டிருக்கிறார்கள். இரு மதங்களும் சகோதரத்துவத்தை கொண்டுள்ளதால் தான் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. இந்தியாவை தவிர வேறு எங்காவது இந்து என சொல்லக்கூடிய அளவிற்கு நாடு இருக்கிறதா என்று சுய விமர்சனம் செய்ய வேண்டும். இந்தியாவையே இன்னும் இந்து நாடு என அறிவிக்க முடிகிறதா, அறிவிக்க முடியாது. இது மதமாக இல்லை; சகோதரத்துவத்தை போதிக்கவில்லை. பாகுபாடுகளை உயர்த்தி பிடிக்கிறது.

மதச்சார்பின்மைக்கும் பதிய வியாக்கனம் சொல்கிறார் தமிழக பாஜக தலைவர். அறியாமையில் பேசுகிறாரா.. வேண்டுமென்று பிதற்றுகிறாரா என தெரியவில்லை. மதச்சார்பின்மை என்பதற்கு அவர் சொல்லுகிற விளக்கம் அவரவர் மதத்தை பின்பற்ற வேண்டும். குடிமக்கள் மதம் சார்ந்து இருக்கலாம். இந்திய அரசு மதச்சார்பற்ற அரசாக இருக்க வேண்டும். குடிமக்களை குடிமக்களாக மட்டும் பார்க்க வேண்டும். கருத்தை, வரலாற்றை, உண்மையை திரிப்பது பாஜக பேசும் அரசியல் அதனால் தான் விமர்சிக்கிறோம்.

நாடாளுமன்றத்தில் பேசும் போதும் ஒரு சார்பின்மை பற்றி பேசினேன். 20ம் நூற்றாண்டில் இந்திய யேசு புரட்சியாளர் அம்பேத்கர், என்ன பேசினாரோ அதையே தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி அதிகாரத்தை எதிர்த்து பேசினார். யேசு பெருமான் 32 ஆண்டுகள் தான் வாழ்ந்தார், 3 ஆண்டுகள் மட்டுமே போதனைகள் செய்தார். 29 ஆண்டுகள் சராசரி மனிதனாக வாழ்ந்தார். 3 ஆண்டுகள் போதித்த போதனைகள் இதுவரை உலகை ஆள்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.