ஹாக்கி உலகக் கோப்பை போட்டிக்கான கோப்பையை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்து!

ஒடிசா மாநிலத்தில் 2023 ஜனவரியில் நடைபெறவுள்ள ஹாக்கி உலகக் கோப்பை போட்டிக்கான கோப்பையை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்து பெற்றனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

இன்று (21.12.2022) தலைமைச் செயலகத்தில், ஒடிசா மாநிலம், புவனேஷ்வர்-ரூர்கேலாவில் 13.01.2023 முதல் 29.01.2023 வரை நடைபெற உள்ள உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் கோப்பையை, தமிழ்நாடு ஹாக்கி விளையாட்டு சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் முதல்வரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயணம் மேற்கொள்ளும் ஹாக்கி உலகக் கோப்பை மகாராஷ்டிர மாநிலம், மும்பையிலிருந்து விமானம் மூலமாக சென்னை வந்தடைந்தது. இந்த ஹாக்கி உலகக் கோப்பைக்கு சென்னை விமான நிலையத்தில் ஹாக்கி விளையாட்டு வீரர், வீராங்கனைகள், தமிழ்நாடு ஹாக்கி சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

ஹாக்கி உலகக்கோப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மேலும் பிரபலப்படுத்தும் வகையில், உலகக்கோப்பையை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் இந்திய ஹாக்கி செயலாளர் சேகர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர். இதையடுத்து, உலகக்கோப்பையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இக்கோப்பையானது, தமிழ்நாட்டின் முன்னணி ஹாக்கி வீரர்கள் உள்ளிட்டோரால் அண்ணா பல்கலைக்கழகம், எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, மாலை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்திற்கு கொண்டு வரப்படும். அங்கு, பாரம்பரிய முறையில் மேள தாளங்கள் முழங்க கோப்பைக்கும் வீரர்களுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும். பின்னர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி மற்றும் காவல்துறை அணிகளிடையே சிறப்பு கண்காட்சி போட்டி நடைபெறவுள்ளது. கண்கவர் கலைநிகழ்சிகளும் நடைபெறவுள்ளன. அதனையடுத்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஹாக்கி உலகக் கோப்பையை கேரளா ஹாக்கி நிர்வாகிகளிடம் வழங்குவார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடடெங்கும் அடுத்த 15 நாட்களில் 100 பள்ளிகளில் விழிப்புணர்வு ஹாக்கி போட்டிகளை இந்திய ஹாக்கி அமைப்பு, தமிழ்நாடு ஹாக்கி சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தவுள்ளது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர் / உறுப்பினர் செயலர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.