எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் தமிழக அரசு கேவியட் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. வேலுமணியின் மேல்முறையீட்டு மனு மீது உத்தரவு பிறப்பிக்கும் போது, தங்கள் தரப்பை கேட்க வேண்டும் என தமிழக அரசு மனுவில் கூறியுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.பொன்னி ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை கைவிடுவது என தமிழக அரசு முடிவு செய்தது.

இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக டெண்டர் முறைகேடு தொடர்பாகவும், வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும் குற்றம் சாட்டி இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் இரண்டு வழக்குகள் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்கா ராமன் அடங்கிய அமர்வு, வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. அதே சமயம் அவருக்கு எதிரான சொத்துக் குறிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், இது தொடர்பான அவரது மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.

சொத்துக் குறிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து வேலுமணியின் மேல்முறையீட்டு மனு மீது உத்தரவு பிறப்பிக்கும் போது, தங்கள் தரப்பை கேட்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தல் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.