பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி மத்திய அரசு உளவு பார்ப்பதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் எம்.பி.யை அமித்ஷா கண்டித்தார்.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று போதைப்பொருள் நடமாட்டம் குறித்து விவாதம் நடந்தது. அதில், காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகாய் பேசியதாவது:-
இந்தியாவுக்குள் போதைப்பொருள் வருவதை தடுக்க நிலம், கடல் எல்லைகளிலும், சர்வதேச விமான நிலையங்களிலும் என்னென்ன கண்காணிப்பு முறைகளை வைத்து இருக்கிறீர்கள். அதுபோல், இந்தியா-மியான்மர் எல்லையில் ஆயுத கடத்தல், ஆள்கடத்தல் மற்றும் விலங்குகளின் பாகங்கள் கடத்தலை முறியடிக்க என்னென்ன கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறீர்கள். எங்களை மீண்டும், மீண்டும் உளவு பார்க்கிறீர்கள். எங்கள் போன்களிலும், பத்திரிகையாளர்கள் போன்களிலும் ‘பெகாசஸ்’ மென்பொருளை பொருத்துகிறீர்கள். அந்த மென்பொருளை பயன்படுத்தி, இதுவரை எத்தனை போதைப்பொருள் மாபியாக்களை பிடித்து இருக்கிறீர்கள்? என்று அவர் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அவரை கடுமையாக கண்டித்தார். அமித்ஷா கூறியதாவது:-
தனது செல்போனில் ‘பெகாசஸ்’ பொருத்தப்பட்டு இருப்பதாக தீவிரமான குற்றச்சாட்டை உறுப்பினர் கூறியிருக்கிறார். அதற்கான ஆதாரத்தை அவர் சபையில் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அவரது வார்த்தைகள் நீக்கப்பட வேண்டும். இந்த சபை, அக்கறையுடன் விவாதம் நடத்தும் இடம், பொறுப்பற்ற அரசியல் செய்யும் இடம் அல்ல என்று அவர் கூறினார்.
அதற்கு கவுரவ் கோகாய், சபாநாயகர் ஓம்பிர்லாவை பார்த்து, ”உளவு பார்க்க ‘பெகாசஸ்’ பயன்படுத்துகிறீர்களா? இல்லையா? என்று நான் கேட்டது தவறா? என்று சபாநாயகர் தீர்ப்பளிக்க வேண்டும்” என்று கூறினார்.
அமித்ஷா மீண்டும் பேசுகையில், ”தனது செல்போனில் ‘பெகாசஸ்’ பொருத்தப்பட்டதாக அவர் சொல்கிறார். அதற்கு ஆதாரம் காட்ட வேண்டும். இதுபோன்று அவர் பேசக்கூடாது. சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பளித்து விட்டது. உங்கள் தலைவரைப் போலவே, நீங்களும் படிப்பதில்லை என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது” என்று கூறினார்.
அப்போது, சபாநாயகர் ஓம்பிர்லா குறுக்கிட்டு, ”உறுப்பினர்கள் ஆதாரத்துடன் கருத்துகளை முன்வைத்தால், சபையின் கண்ணியம் அதிகரிக்கும்” என்று அறிவுறுத்தினார்.