திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக கனிமொழி எம்.பி. தலைமையில் போராட்டக்குழுவினர் மத்திய மந்திரி நிதின் கட்காரியிடம் மனு அளித்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடி, நகரின் மிக அருகில், விதிகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இங்கு திருமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர் வாகனங்களும் சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு அப்பகுதி வியாபாரிகள், டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக சுங்கச்சாவடி பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வருகிறது.
இந்த நிலையில், மேற்கண்ட பிரச்சினைகளை சொல்லி சுங்கச்சாவடியை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக சுங்கச்சாவடி எதிர்ப்பு போராட்டக்குழுவினர் டெல்லியில் நேற்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரியை சந்தித்து மனு அளித்தனர். தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி, விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், தென்காசி எம்.பி. தனுஷ், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ஆகியோரும் போராட்டக்குழுவினருடன் சென்று மந்திரியிடம் கோரிக்கையை வலியுறுத்தினர். பின்னர் இதுபற்றி போராட்டக்குழுவினர் கூறும்போது, “எங்களது கோரிக்கையை கனிவோடு கேட்ட மத்திய மந்திரி, இன்னும் 3 மாதங்களில் இதற்கொரு நல்ல தீர்வு ஏற்படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்” என்றனர்.