எல்லா பிரச்சினைகளுக்கும் இடையே உக்ரைன் வீழவில்லை. இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த, பிப்., 25ல் போர் தொடுத்தது. கடந்த ஒன்பது மாதங்களாக போர் நீடித்து வருகிறது. ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன.
போரில் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து, அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகிறது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி முதன்முறையாக அமெரிக்க பயணம் மேற்கொண்டார்.
போலந்தின் செமிசோ நகருக்கு ரயிலில் பயணித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அங்கிருந்து அமெரிக்கா சென்று வாஷிங்டனில் இன்று (டிச.,22) அதிபர் ஜோ பைடனை சந்தித்து போர் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். உக்ரைனுக்கு கூடுதலாக 15 ஆயிரம் கோடி ரூபாய் ராணுவ தளவாடங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.
அமெரிக்கா அதிரபர் ஜோ பைடன் பேசியவதாவது:-
சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் வளமான உக்ரைனின் தொலைநோக்கு பார்வை குறித்து நாங்கள் பகிர்ந்து கொண்டோம். இந்த போர் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். கண்ணியமான முறையில் புடின் நடந்து கொண்டால் இது சாத்தியமாகும். ரஷ்யாவுக்கு எதிரான போரில், உக்ரைனை தனித்துவிட மாட்டோம் என்றும் அந்நாட்டிற்கு ஆதரவாக நேட்டோ படைகள் துணை நிற்கும் . இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியவதாவது:-
நீங்கள் கொடுக்கும் நிதியுதவி வெறும் தானம் என்று நினைக்காதீர்கள் இது முதலீடு. இந்த அவையில் நான் உரையாற்றுவது பெருமைக்குரியது. எல்லா பிரச்சினைகளுக்கும் இடையே உக்ரைன் வீழவில்லை. உயிருடன், ரஷ்யாவை உதைக்கிறது. இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறது. ரஷ்யாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கிறது. அதிபர் பைடன் எங்களுக்கு துணை நிற்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. உக்ரைன் ஒருபோது ரஷ்யாவிடம் சரணடையாது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த சந்திப்பில் உக்ரைனுக்கு கூடுதலாக 15 ஆயிரம் கோடி ரூபாய் ராணுவ தளவாடங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. இதில் பேரிட்லாட் ஏவுகணைகளுடன் கூடிய பல அடுக்கு வான் தாக்குதல் எதிர்ப்பு கருவிகளையும் உக்ரைன் பெற்றுக்கொண்டது.
அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பேசுவதற்காக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி சென்றார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி அவருக்கு அமெரிக்க தேசியக்கொடியை வழங்கினார். இந்த கூட்டுக்கூட்டத்தில் ஜெலன்ஸ்கி பேசும்போது கூறியதாவது:-
எங்களுக்கு அமைதி வேண்டும். இதற்கான 10 அம்ச திட்டத்தை வழங்கி உள்ளேன். அதுபற்றி ஜனாதிபதி ஜோ பைடனிடம் விவாதித்தேன். இது இன்னும் பல பத்தாண்டுகளுக்கு கூட்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை தரும் என நம்புகிறேன். உக்ரைனியர்களாகிய நாங்கள் சுதந்திர போரை கடந்து செல்வோம். நாங்கள் கண்ணியத்துடன், வெற்றிகரமாக சுதந்திரத்தை அடைவோம். நாங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம். எங்கள் நாட்டில் மின்சாரம் இல்லை என்றாலும், எங்களில் நாங்கள் வைத்துள்ள நம்பிக்கை தீபத்தை அணைத்து விட முடியாது. ரஷ்யா எங்கள் மீது ஏவுகணைகளால் தாக்கினால், நாங்கள் எங்களைக் காக்க எங்களால் முடிந்ததைச் செய்வோம். அவர்கள் எங்களை ஈரான் டிரோன்களால் தாக்கினால், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது எங்கள் மக்கள் வெடிகுண்டு தவிர்ப்பு புகலிடத்துக்கு செல்வார்கள். எங்கள் போர், உயிருக்கானது மட்டுமல்ல. எங்கள் போர், சுதந்திரத்துக்கானது, உக்ரைன் மக்களின் பாதுகாப்புக்கானது. இந்த போர், என்னவிதமான உலகத்தில் எங்கள் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் வசிக்கப்போகின்றன என்பதை வரையறை செய்யும். உக்ரைன் உயிருடன்தான் இருக்கிறது. நாங்கள் தாக்குதல் நடத்துகிறோம். நாங்கள் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம். உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் ராணுவ உதவி, தொண்டு அல்ல. இது எதிர்கால பாதுகாப்புக்கான முதலீடு ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.