பொங்கல் பரிசில் கரும்பு கொடுக்காமல், தமிழக அரசு விவசாயிகளை தெருவில் நிறுத்தியுள்ளதாக சசிகலா விமர்சித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். எம்ஜிஆர் நினைவிடத்தில் சசிகலா தரப்பினர் உறுதிமொழி ஏற்றனர். அப்போது, அதிமுகவுக்கு சசிகலாவை தலைமை தாங்க வைக்கவும், திமுகவை வென்று அதிமுக ஆட்சி அமைத்து மக்கள் பணி செய்திட உறுதிமொழி ஏற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலாவிடம் ஜெயக்குமாரின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சசிகலா, எனக்கும் – அதிமுகவுக்கும் சம்மந்தமில்லையா என்று தொண்டர்களிடம் கேள்வி கேட்டால், சரியான பதில் கிடைக்கும். தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று தனிப்பட்ட நபர் ஒரு கம்பெனிய நடத்துவது போல் சொல்ல முடியாது. அதனால் அதிமுகவில் தொண்டர்களின் முடிவு தான் முக்கியமானது. அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் அப்படி தான் கட்சியை உருவாக்கியுள்ளார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பது குறித்த கேள்விக்கு, எனது வழக்கு வேறு. ஓபிஎஸ் – எடப்பாடி பழனிசாமி இடையிலான வழக்கு வேறு. அதிமுகவை பொறுத்தவரை தொண்டர்களின் எண்ணம் எதுவோ, அதுதான் வெற்றிபெறும். தொண்டர்களின் முடிவுபடி தான் நடக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பின்னர் தமிழக அரசின் பொங்கல் பரிசு குறித்து சசிகலா கூறுகையில், கரும்பை மக்களிடம் விற்பனை செய்ய வழியில்லாமல் விவசாயிகள் தெருவில் நிற்கிறாகள். அதிமுக ஆட்சியில் 7 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையின் போது, ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் கரும்பு வழங்கியுள்ளோம். அதனை திமுக அரசு நிறுத்தியுள்ளது. அதனை பற்றி பேசவே பயப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவருக்கும் என்ன சொல்ல விரும்பிகிறீர்கள் என்ற கேள்விக்கு, அதிமுகவின் தலைவர்களுக்கு நாம் பிறந்தநாள் கொண்டாடுகிறோம், நினைவு அஞ்சலியையும் செலுத்துகிறோம். எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே பயணித்துள்ளது. அதனால் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். திமுகவுக்கு எந்த சூழலிலும் இடம் கொடுத்துவிடாமல் அதிமுகவினர் செயல்பட வேண்டும். அதற்கான பணிகள் நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.