ஆகம விதிகள் என்பது ஆண்டவனால் வகுக்கப்பட்டது அல்ல. நமக்குநாமே வகுத்துக்கொண்டது என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27ம் தேதி நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர்கள் குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கும்பாபிஷேகம் என்பதால் பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் ஒருவித எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோவில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் தொடர்ந்து நடந்துவரும் நிலையில் பழனி கோவில் மூலவர் சிலையான நவபாஷாண முருகன் சிலைக்கு மருந்து சாத்துவதில் அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அர்ச்சக ஸ்தானிக சங்கத்தலைவரும் பழனி கோவில் மூத்த அர்ச்சகருமான கும்பேஷ்வர குருக்கள் பழனி கோவில் அர்ச்சகர்களுக்கு வாட்சப் ஆடியோ ஒன்று அனுப்பியுள்ளார். அதில் பழனி கோவில் சிலையை பலப்படுத்தாமல் கும்பாபிஷேகம் நடத்த சொல்வதாகவும், ஆனால் அதை மறுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அர்ச்சகர்களிடம் திருக்கோவில் சார்பில் கையெழுத்து கேட்டால் யாரும் போடவேண்டாம். மீறி கையெழுத்து போட்டால் பிரச்சினைகள் வந்தால் உதவிக்கு வரமுடியாது என்றும் தெரிவித்துள்ளார். கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான ஜனவரி 27ம் தேதி அன்று பூரம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் எனபதால், பூரம் நட்சத்திரத்தை கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கேடு தரும் என்றும், நாட்டின் மன்னனின் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் ஏற்படும் நாளன்று அரசு சார்பில் எவ்வித காரியங்களையும் நடத்தக்கூடாது என்பது விதி என்றும், அவ்வாறு விதிமீறி நடந்தால் மன்னனுக்கு கேடாக முடியும் என்பது விதி என்றும், எனவே குறிப்பிட்ட அந்த நாளில் கும்பாபிஷேகம் நடந்தால் நாட்டு மன்னர் என்ற முறையில் தமிழக முதல்வரான ஸ்டாலினுக்கும், தமிழ் நாட்டிற்கும் கேடு ஏற்படும் என்றும் அர்ச்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
பழனி முருகன் நவபாஷாண சிலைக்கு மருந்து சாத்த வேண்டாம் என அதிகாரிகள் தெரிவிப்பதாகவும் மருந்து சாப்பிடாமலேயே கும்பாபிஷேகத்தை நடத்துமாறு அதிகாரிகள் தெரிவிப்பதாகவும், இது ஆகம விதிகளை மீறிய செயல் என்றும், அவ்வாறு செய்தால் பக்தர்கள் பொதுமக்கள் மற்றும் நாட்டிற்கும் ஆபத்து ஏற்படும் என்றும்,பழனி அர்ச்சகஸ்தானிய சங்கத் தலைவர் கும்பேஸ்வர குருக்கள் கூறியுள்ளார். மூலவரின் பாதுகாப்பு முக்கியமானது என்றும், ஏற்கனவே மூலவர் சிலைக்கு செய்துவந்த ஆறுகால அபிஷேகங்களும் எம்ஜிஆர் காலத்தில் நிறுத்தப்பட்டது என்றும் கூறினார். எனவே இதுபோன்ற ஒவ்வொன்றையும் நிறுத்தினால் மூலவர் சிலை பலமில்லாமல் போகும் என்றும், மருந்து சாத்தாமல் அவசரப்பட்டு கும்பாபிஷேகம் செய்தால் நாடு சுபிட்சமின்றி போகும் என்றும் கும்பேஸ்வர குருக்கள் தெரிவித்தார்.
இந்த நிலையில் பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் துவங்குவதற்கான முகூர்த்தக்கால் நடப்பட்டுள்ளது. நேற்று கோவிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மலைக்கோவில் மேல்பிரகாரத்தில் உள்ள பாறைவேல் மண்டபம் மற்றும் கார்த்திகை மண்டபம் ஆகிய பகுதிகளில் யாகசாலை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. முன்னதாக அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி ஆகியோர் முகூர்த்தக்காலை சுமந்து வந்தனர். இதைத் தொடர்ந்து பழனி மலைக்கோவில் பிரகாரங்களில் உள்ள சில்வர் தடுப்புகள் மற்றும் மடக்கு கதவுகள், தங்கவிமானத்தை சுற்றியுள்ள இரும்பினால் ஆன பாதுகாப்பு வேலிகள் ஆகியவற்றை அகற்றிவிட்டு, 1 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பில் பித்தளையால் ஆன தடுப்பு கம்பிகள், மடக்குகதவுகள், பாதுகாப்பு வேலிகள் ஆகியவை அமைக்கும் பணிகளும் துவங்கப்பட்டது. பழனி மலைக்கோவில் பிரகாரங்களில் உள்ள சில்வர் தடுப்புகள், மடக்கு கதவுகள் உள்ளிட்டவற்றை அகற்றிவிட்டு, ரூ.1.12 கோடி மதிப்பில் பித்தளையால் ஆன தடுப்பு கம்பிகள், மடக்குகதவுகள், பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணியை அமைச்சர் சேகர்பாபு துவங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, பழனி முருகன் கோவிலுக்கு வருடத்திற்கு சராசரியாக 1.20 கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, பழனி கோயிலில் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.200 கோடியில் வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு, முதல்வரிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அடுத்தாண்டு இறுதிக்குள் பணிகளை துவங்குவதற்கான டெண்டர்கள் விடப்படும். அதற்காக முழு வீச்சில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மூலவருக்கு மருந்து சாத்துதல் குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும். ஆகம விதிகள் என்பது ஆண்டவனால் வகுக்கப்பட்டது அல்ல. நமக்குநாமே வகுத்துக்கொண்டது. எந்த ஒரு பணி செய்தாலும், அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது. யாருடைய தலையீடும் இல்லாமல் மூத்த அர்ச்சகர்களோடு கலந்துபேசி ஆகம விதிக்கு உட்பட்டே கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.