எடப்பாடி பழனிசாமி என் மீது தொடர்ந்து தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தால் அவர் மீது அவதூறு வழக்கு தொடருவேன் என்று ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என்ற போட்டி தொடர்ந்து வருகிறது. இதனால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக உட்கட்சிப்பூசல் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஜூன் 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் அவர் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். இந்த பொதுக்குழுவுக்கு உயர்நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டாலும், அதன் பிறகு தொடரப்பட்ட மேல்முறையீட்டில் தடை ரத்து செய்யப்பட்டதால் எடப்பாடியே இடைக்கால பொதுச்செயலாளராக தொடர்கிறார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிமுகவின் பெயர், கட்சி கொடியை பயன்படுத்துவது தொடர்பாக கடந்த 4 நாட்களுக்கு முன்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு தலைமைகம் மூலமாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் எடப்பாடி பழனிசாமி. அதில், “அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி, பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உள்ளனர். இதனை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் கொடி, பெயரை தொடர்ந்து பயன்படுத்தி வருவது ஏன்? எடப்பாடி பழனிசாமி வசம் கட்சியின் பொறுப்பு இருப்பதால், ஓபிஎஸ் இதுபோல் செயல்படுவது குறித்து சட்ட விளக்கம் அளிக்க வேண்டும். சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் இந்த நோட்டீஸிற்கு உடனடியாக பதில் அளிக்காவிட்டால், சட்ட நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தனக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீசுக்கு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து உள்ளார். அதில், “அதிமுக எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்கு எதிராகவே எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். அதிமுகவில் நான் வகித்த ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து என்னை தகுதி நீக்கம் செய்த கட்சியின் அடிப்படை உறுப்பினர்களுக்கே அதிகாரம் உண்டு. அதிமுக பொதுக்குழுவால் என்னை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்துவிட முடியாது. எடப்பாடி பழனிசாமி என் மீது தொடர்ந்து தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தால் அவர் மீது அவதூறு வழக்கு தொடருவேன். அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி யாரிடம் இருக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கு சிவில் வழக்கு. இதற்கும் கட்சியின் கட்டுப்பாட்டிற்கும் சம்பந்தமே இல்லை. அதிமுக தலையகத்தின் சாவி ஒருவரிடம் இருப்பதன் காரணமாகவே அவர் கட்சியை உரிமை கொண்டாடிவிட முடியாது” என உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பின் விபரங்களை குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமியின் வக்கீல் நோட்டீசுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அனுப்பி உள்ளார்.