கொரோனாவை காரணம் காட்டி யாத்திரையை முடக்க மத்திய அரசு சதி: ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸின் யாத்திரையை கண்டு பயந்துபோய் கொரோனாவை காரணம் காட்டி யாத்திரையை முடக்க மத்திய அரசு முயல்வதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியிருக்கிறார்.

கடந்த செப்டம்பரில் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கிய இந்த யாத்திரையானது கேரளம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா என பல மாநிலங்களை கடந்து சமீபத்தில் ராஜஸ்தானில் தனது 100வது நாளை வெற்றிகரமாக முடித்திருக்கிறது. இந்நிலையில் 108வது நாளான கடந்த 24ம் தேதி இந்த யாத்திரை தேசிய தலைநகர் டெல்லியில் நுழைந்தது. காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையிலான இந்த யாத்திரைக்கு டெல்லியில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

யாத்திரை தொடங்கியது முதல் பல்வேறு அரசியல் தலைவர்கள், முன்னாள் அரசு உயர் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலரும் ராகுல் காந்தியுடன் ஆங்காங்கே யாத்திரையில் பங்கேற்று அவருடன் சிறிது தூரம் நடந்து தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர். தமிழ்நாட்டிலிருந்து மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ, திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் உள்ளிட்டோர் யாத்திரையில் பங்கேற்று ராகுல் காந்திக்கு ஆதரவளித்தனர்.

இந்நிலையில், இந்த யாத்திரையில் பங்கேற்று ராகுல் காந்தியுடன் உரையாடியவர்களிடம் உளவுத்துறை கேள்வியெழுப்பியுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “இந்த யாத்திரை குறித்து பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதட்டத்தில் இருக்கின்றனர். எனவே யாத்திரையில் பங்கேற்று ராகுல் காந்தியுடன் உரையாடியவர்களிடம் உளவுத்துறை தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகிறது” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கெனவே காங்கிரஸின் யாத்திரையை கண்டு பயந்துபோய் கொரோனாவை காரணம் காட்டி யாத்திரையை முடக்க மத்திய அரசு முயல்வதாக இவர் குற்றம் சாட்டியிருந்தார். பாரத் ஜடோ யாத்திரை குறித்து தொடக்கத்தில் பெரிதும் அலட்டிக்கொள்ளாத மத்திய அரசு, தற்போது கொரோனா தொற்று தீவிரமடைந்து இருக்கும் நிலையில் யாத்திரையை ஒத்தி வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இதனை குறிப்பிட்டு பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறது. அதாவது, “யாத்திரையை கலைக்க வேண்டும் என்றுதான் அவர்கள் இவ்வாறு திட்டம் தீட்டுகிறார்கள். யாத்திரை இலக்கை நொக்கி தொடர்ந்து முன்னேறும்” என ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.