கோடநாடு வழக்கு: சிபிஐ எஸ்பி முரளி ரம்பாவுக்கு சம்மன்!

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வுதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சம்பவம் நடந்தபோது நீலகிரி மாவட்ட எஸ்பியாக செயல்பட்ட தற்போதைய சிபிஐ எஸ்பி முரளி ரம்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017 ஏப்ரல் 23 நள்ளிரவில் காவலாளி ஓம் பஹதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டார். மேலும் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்த ஆவணங்கள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் இன்னொரு காவலாளி கிருஷ்ணதபா காயமடைந்தார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் 2017 ஏப்ரல் 28ல் விபத்தில் பலியானார். இதனால் இந்த வழக்கு பல மர்ம முடிச்சுகளுடன் தொடர்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தாலும் கூட இன்னும் வழக்கு முடிவுக்கு வரவில்லை. இதனால் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதுவரை வழக்கு தொடர்பாக 200க்கும் அதிகமானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

இதற்கிடையே வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் சசிகலாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சிபிசிஐடி போலீசார் மேலாளர் நடராஜ், காசாளர் மற்றும் கணக்கீட்டாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதோடு வழக்கு தொடர்பாக முன்னாள் காவல் அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் வரும் நாட்களில் விசாரணை தீவிரப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதுதவிர முன்னாள் முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிஐ எஸ்பி முரளி ரம்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை நடந்தபோது நீலகிரி மாவட்ட எஸ்பியாக இவர் இருந்தார். இந்நிலையில் தான் அவரிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு துறை அதிகாரிகள் முடிவு செய்து சம்மன் அனுப்பி உள்ளனர். தற்போது அவர் மத்திய அரசு பணியான சிபிஐயில் எஸ்பியாக உள்ளார். இதனால் அவருக்கான சம்மன் சிபிஐ தலைமை செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்மன் அவரிடம் விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்த சம்மனை தொடர்ந்து ஜனவரி முதல் வாரத்தில் எஸ்பி முரளி ரம்பா சிறப்பு புலனாய்வுத்துறை முன் ஆஜராக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இவரிடம் சென்னையில் வைத்து விசாரணை நடத்தப்படலாம். தற்போது முரளி ரம்பா சிபிஐயில் ஆந்திராவில் பணியாற்றி வருகிறார். இவர் விசாரணைக்கு ஆஜராகும்போது கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக கூடுதலாக முக்கிய விஷயங்கள் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு துறைக்கு கிடைக்கலாம் என நம்பப்படுகிறது.