நிலுவையில் உள்ள சான்றிதழ்கள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் எனவும், அதுதொடர்பான விவரங்கள் தகவல் பலகையிலும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வரின் தகவல் பலகை தரவுகளின் அடிப்படையில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது பல்வேறு துறைகளின் முக்கிய திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக, தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, உள்துறை, போக்குவரத்து துறை, ஆகிய துறைகளின் முக்கிய திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள், மற்றும் பொதுவான செயலாக்கம் குறித்து, தகவல் பலகை தரவுகளின் படி முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வழங்கப்படும் சாதிச் சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்றவை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், நிலுவையில் உள்ள சான்றிதழ்களை அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் எனவும், அதுதொடர்பான விவரங்கள் தகவல் பலகையிலும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தஞ்சாவூர், கோவை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் பட்டா மாறுதலில் தாமதங்கள் காணப்படுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அலுவலர்களுக்கு இது குறித்து தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு, பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி இந்த சேவை வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார். அதேபோன்று நகராட்சி நிர்வாகத் துறையின் பணிகளும் தகவல் பலகை தரவுகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, வேலூர், தருமபுரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் நகராட்சி நிர்வாகப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மழைநீர் வடிகால், பாதாள சாக்கடைத் திட்டங்கள், சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
போக்குவரத்துத் துறையில் போதுமான எண்ணிக்கையில் பேருந்து சேவைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு குறையாமல் போதுமான அளவு இயக்கப்பட வேண்டும் என்றும், குறைவான பேருந்து சேவைகள் இயக்கப்பட்டால் அதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை உடனடியாக களைய வேண்டும். பேருந்து நிலையங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்கிட உரிய நடவடிக்கைள் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அடுத்தபடியாக மாநிலத்தில் பல்வேறு குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக ஆய்வு செய்யப்பட்டது. நிலுவை வழக்குகள் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதேநேரத்தில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் நவீன முறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.