புதுக்கோட்டை இடையூரில் கழிவுநீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதற்கு நீதிபதிகள் முறையாக மனுவாக தாக்கல் செய்தால், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் புதுக்கோட்டையில் நடைபெற்று இருக்கும் சம்பவம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. புதுக்கோட்டையில் இறையூர் என்ற கிராமத்தில் நூற்றாண்டுகளாக அங்கு ஜாதி கொடுமைகள் கடைபிடிக்கப்பட்டு வருவது தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. புதுகோட்டையில் உள்ள அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சிக்கு உள்ளே இருக்கும் சின்ன கிராமம்தான் இறையூர். இந்த கிராமத்தில் ஜாதி வாரியாக தெருக்கள் பிரிக்கப்பட்டு மக்கள் வசித்து வருகின்றனர். எஸ், எஸ்டி பிரிவினருக்கும் கூட வேறு வேறு தெருக்கள் இங்கே உள்ளன. 50 – 60 தலித் குடும்பங்கள் இங்கே வசித்து வருகின்றன. இந்த கிராமம் ஜாதி கொடுமைகள் விடாமல் தொடரும் சில தமிழக கிராமங்களில் ஒன்றாகும்.
இறையூர் கிராமம் முன்பு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வந்த இரட்டை குவளை முறை, தலித்துகளை தொட்டால் தீட்டு, தலித் இருக்கும் தெருவுக்குள் மற்ற ஜாதியினர் செல்ல கூடாது, தலித் தெருவுக்குள் சாமி ஊர்வலம் நடத்த கூடாது, கோவில்களுக்குள் தலித்கள் செல்ல கூடாது போன்ற கட்டுப்பாடுகள் இத்தனை நாட்களாக இருந்து வந்துள்ளன. ஆனால் இவை எல்லாம் மிகவும் அமைதியாக, ஒடுக்குமுறை என்றே தெரியாத அளவிற்கு பழக்க வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வந்து இருக்கிறது. அதாவது உங்களை நாங்கள் ஒடுக்குகிறோம் என்பதற்கான சுவடே இல்லாமல் கிட்டத்தட்ட ஒரு பல வருட பழக்கமாக இதை கடைப்பிடித்து வந்துள்ளனர். அவ்வப்போது ஒரு சில சாதி உரசல்கள் இறையூர் கிராமத்தில் வந்தாலும் பெரிதாக மோதல்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த இறையூர் கிராமத்தை சுற்றி இருக்கும் மற்ற கிராமங்களில் எல்லாம் ஜாதி இன்னும் மோசமாக் தலைவிரித்தாடுகிறது. இங்கெல்லாம் தலித் மக்களுக்கும் – இடைநிலை சாதியினருக்கும் இடையில் கடுமையான மோதல்கள் நிலவி வருகிறது. ஆனாலும் இறையூர் கிராமத்தில் அந்த அளவிற்கு வெளிப்படையாக மோதல்கள், கலவரங்கள் ஏற்பட்டது இல்லை. தலித் மக்களுக்கும் தங்களுக்கு ஏற்படும் அநீதிகளை பெரிதாக கேள்வி கேட்காமால்.. அந்த மோசமான சூழ்நிலையிலேயே வாழ பழகிவிட்டனர் என்று கூறப்படுகிறது.
இறையூர் கிராமம் அருகே இருக்கும் வேங்கை வாயிலில்தான் தலித் மக்கள் இருக்கும் தெருவிற்கான தண்ணீர் வழங்கப்படுகிறது. அந்த கிராமத்தில் இரண்டு தண்ணீர் டேங்க் உள்ளது. ஒன்று தலித் மக்களுக்கு தண்ணீர் வழங்கும் டேங்க். இன்னொன்று மற்ற ஜாதியினருக்கு தண்ணீர் வழங்கும் டேங்க். இதில் தலித் மக்களுக்கு தண்ணீர் வழங்கும் டேங்க் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது ஆகும். இதில் தண்ணீர் குடித்த இறையூர் தலித் மக்கள் சிலருக்கு கடந்த சில நாட்களாக வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டுள்ளது. வரிசையாக பலருக்கு இந்த பிரச்சனை ஏற்பட்ட நிலையில் இவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். குடிநீர் இவர்களின் குடிநீரில் ஏதாவது பிரச்சனை இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அப்பகுதி மக்கள் டேங்கை திறந்து பார்த்த நிலையில், அதன் உள்ளே மலம் இருந்தது தெரிய வந்துள்ளது. அதிக அளவில் அதில் மலம் கொட்டப்பட்டு இருந்துள்ளது. இதையடுத்து கந்தவர்க்கோட்டை எம்எல்ஏ சின்னத்திரைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எம்எல்ஏ எடுத்த நடவடிக்கையின் பெயரில் இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இறையூர் தலித் மக்களுக்கு தண்ணீர் வசதி கிடைத்ததே 2017ல் தான். அப்போதுதான் அவர்களுக்கு தண்ணீர் டேங்க் அமைக்கப்பட்டது. அப்படி இருக்க.. பெரும் போராட்டத்திற்கு பின் வந்த தண்ணீரில் மலத்தை கலந்து உள்ளனர். இந்த டேங்க் மேலே மிகப்பெரிய மூடி இருக்கும். அந்த மூடியை சிறுவர்கள் திறக்க முடியாது. அப்படி என்றால் விவரம் அறிந்த பெரியவர்கள் யாரோதான் இந்த கொடூரத்தை செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா ஆகியோர் இந்த பகுதியில் ஆய்வு செய்தனர். இங்கே ஆய்வு செய்த போதுதான் மக்கள் தங்கள் குமுறல்களை இரண்டு பேரிடமும் தெரிவித்துள்ளனர். அதில் எங்களை அய்யனார் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என்று மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அதேபோல் இரட்டை குவளை முறை இருப்பதாகவும் கூறி உள்ளனர். இதை கேட்டதும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா இரண்டு பேருமே அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதையடுத்து அந்த டீ கடைக்கு சென்று டீ கடை நடத்தியவரை விசாரித்து அவரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
அதன்பின் அய்யனார் கோவிலில் ஆலைய நுழைவு செய்ய தலித் மக்களுடன் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா இருவரும் சென்றுள்ளனர். அப்போது அங்கு இருந்த இடைநிலை ஜாதியை சேர்ந்த பெண் மீது சாமி(?) வந்து.. “இவங்களை” எல்லாம் உள்ளே விடாத என்று ஆடி இருக்கிறது. அதாவது சாமி வந்து தலித் மக்களை உள்ளே விட கூடாது என்று சொல்லி இருக்கிறது (?). அதோடு சாமி வந்ததாக நடித்த அந்த பெண்.. தலித் மக்களை கெட்ட வார்த்தையிலும் திட்டி இருக்கிறாராம். இதையடுத்து அந்த பெண் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா உத்தரவிட்டனர். நூற்றாண்டுகளாக அங்கு நிலவிய கொடுமையை இரண்டு பெண் அதிகாரிகள் வந்து உடைத்த சம்பவம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்தநிலையில் புதுக்கோட்டை, கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேல்முருகன், விஜயகுமார் அமர்வு முன்பு ஒரு முறையீட்டை முன்வைத்தார். அதில், புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை பல கிராமங்களிலும் இது போன்ற தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் நடந்து வரும் தீண்டாமைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து, அவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும் புதுக்கோட்டை இடையூரில் கழிவுநீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதற்கு நீதிபதிகள் முறையாக மனுவாக தாக்கல் செய்தால், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.