பிரதமர் மோடியின் தாய் உடல்நிலை மோசம்; டாக்டர்கள் தீவிர சிகிச்சை!

பிரதமர் மோடி தம்பி பிரகலாத் மோடி விபத்தில் சிக்கிய நிலையில் இன்று அவருடைய தாயார் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் பிரதமராக இருப்பவர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி. நடுத்தர குடும்பத்தில் வாட்நகர் என்னும் இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தார். தாமோதர் தாஸ் முல்சந் மோடி மற்றும் கீரபேன் தம்பதிக்கு பிறந்த 6 குழந்தைகளில் நரேந்திர மோடி 3வது குழந்தையாக பிறந்தவர். நரேந்திர மோடி ஏற்கனவே அக்டோபர் 7, 2001 முதல் மே 22, 2014 வரை குஜராத் மாநில முதலமைச்சராக பதவியில் இருந்துள்ளார். தனது 8 வயதில் ராட்டிரிய சுவயம்சேவக் சங்கத்தில் (ஆர்எஸ்எஸ்) பிரதமர் மோடி சேர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மைசூர் அருகே பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் காரில் சென்றபோது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பிரகலாத் மோடி, அவரது மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தை ஆகியோர் காயம் அடைந்ததாகவும் இதையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தாயார் ஹீராபென் மோடி திடீரென உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து, அவரை மீட்டு அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு, பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு போதிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல் நிலை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் குழுவினர் தகவல் தெரிவித்து உள்ளனர்.

100 வயதாகும் ஹீராபென் மோடியின் உடல்நிலை தற்போது சிகிச்சைக்கு பிறகு சீராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் சட்ட மன்றத் தேர்தலின்போது பிரதமர் மோடி தனது தாயாரை காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார். இந்த தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி சக்கர நாற்காலியில் உறவினர்கள் உதவியுடன் வாக்கு சாவடிக்கு வருகை தந்து வாக்களித்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தகவல் வெளியானதும் குஜராத் பாஜக எம்எல்ஏக்கள் தர்ஷணாபென் வகேலா மற்றும் கௌசிக் ஜெயின் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். அதேபோல் பிரதமர் மோடியும் தனது தாயாரை காண சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.

இந்தநிலையில் பிரதமரின் தாயார் விரைவாக குணமாக ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘தாய் மற்றும் மகனுக்கு இடையிலான அன்பு நித்தியமானதும், விலை மதிக்க முடியாததும் ஆகும். இந்த கடினமாக சூழலில் மோடி ஜிக்கு எனது அன்பும், ஆதரவும் உள்ளது. தாயார் விரைவாக குணமடைவார் என்ற நம்பிக்கை உள்ளது’’ என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தாயார் திருமதி. ஹீராபென் மோடி அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதையறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவர் விரைவில் நலம்பெற விழைகிறேன்” என்று ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.