பொங்கல் பரிசுடன் முழு கரும்பு ஒன்றை வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ரூ.1000 ரொக்கத்துடன் சேர்த்து முழு கரும்பு ஒன்றை வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தமிழர்களால் ஜனவரி மாதம் 14ஆம் தேதி கோலகலமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களும் பயன்பெறும் வகையில், பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம், ரொக்கம் வழங்கும் திட்டம் ஆகியவை செயல்பாட்டில் உள்ளது. அந்த வகையில், நடப்பாண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வை 2023ஆம் ஆண்டு ஜனவரி 02ஆம் தேதி சென்னையிலும் அன்றைய தினமே அனைத்து மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது தொடர்பாக கண்டனங்கள் எழுந்தன. கரும்பு விசாயிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ததுடன், தங்களிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்து பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். கரும்பு வழங்கப்படாததை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் பொங்க பரிசுத் தொகுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் மீண்டும் நடைபெற்றது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பினையும் சேர்த்து வழங்கிட விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது. அதில், பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ரூ.1000 ரொக்கத்துடன் சேர்த்து முழு கரும்பு ஒன்றை வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் தேதியை மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் கொடுக்கும் பணி ஜனவரி 3ஆம் தேதி முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினை ஜனவரி 2ஆம் தேதிக்கு பதிலாக ஜனவரி 9ஆம் தேதியன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.