ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்த, ஐநா மனித உரிமைகள் தலைவர், தலிபான் ஆட்சியாளர்களை உடனடியாக கட்டுப்பாடுகலைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களைத் தடுக்கும் முடிவின் விளைவுகளை சுட்டிக்காட்டியுள்ள அவர், கடந்த வாரம் தலிபான் அதிகாரிகள் பெண்களுக்கான பல்கலைக்கழக கல்வியைத் தடுத்தனர். இது சர்வதேச சீற்றத்தையும் ஆப்கானிஸ்தான் நகரங்களில் ஆர்ப்பாட்டங்களையும் தூண்டியது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் இருந்து பெண்களை விலக்குவதாக அவர்கள் தெரிவித்த நிலையில், நான்கு சர்வதேச உதவி நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானில் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளது.
எந்தவொரு நாடும் வளர்ச்சியடைய வேண்டுமெனில் உண்மையில் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அதன் மக்கள் தொகையில் பாதியை ஒதுக்கி வைக்க முடியாது, என்று ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் ஜெனிவாவில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகள் அனைத்து ஆப்கானியர்களின் துன்பத்தையும் அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தானின் எல்லைகளுக்கு அப்பால் ஆபத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டார்.
பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான உரிமைகள் குறித்து ஆரம்பத்தில் உறுதியளித்த போதிலும், தலிபான்கள் அவர்களின் இஸ்லாமிய சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தியுள்ளனர். பெண்கள் கல்வி நிலையங்களுக்குச் செல்ல தலிபான் அரசு தடை விதித்துள்ளது, மேலும், ஆடைக்கட்டுப்பாடு, பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லவும் தலிபான் அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் ஆப்கனில் பெண்கள் கல்வி கற்பதற்கு தடை விதித்துள்ள தலிபான்களின் நடவடிக்கையை எதிர்த்து பேராசிரியர் ஒருவர் தனது பட்டப்படிப்பு சான்றிதழ்களை தொலைக்காட்சி நேரலையில் கிழித்து எறிந்தார்.
பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் பேராசிரியர் ஒருவர் தொலைக்காட்சி நேரலையில் பதிவு செய்த எதிர்ப்பு தற்போது வைரலாகி வருகிறது. தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் பங்கேற்ற காபூல் பல்கலைக்கழக பேராசிரியர் விவாதத்தில் பெண்களுக்கு கல்வி கற்க விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து தனது கருத்துக்களை முன்வைத்த வண்ணம் இருந்தார். தொடர்ந்து பேசிய அவர் தன்னுடன் எடுத்து வந்திருந்த தனது டிப்ளமோ, பட்டப்படிப்பு சான்றிதழ்களை நேரலையிலேயே கிழித்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த நாட்டில் கல்விக்கு இடமில்லை என்கிறபோது இன்றிலிருந்து எனக்கு இந்த சான்றிதழ்கள் தேவையில்லை. என்னுடைய சகோதரிகளுக்கும், தாய்க்கும் கல்வி இல்லை என்கிறபோது என்னால் இந்த கல்விமுறையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை” எனத் தெரிவித்தார்.
பெண் கல்வியை வலியுறுத்தி பேராசிரியர் மேற்கொண்ட தலிபான்களுக்கு எதிரான இந்த எதிர்ப்பு பிரசாரம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.