புத்த மத தலைவர் தலாய் லாமாவை உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்பட்ட சீனப் பெண்ணை பீகார் போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலம் புத்தகயா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க தலாய் லாமா வந்திருந்தார். இந்நிலையில் சீன பெண் ஒருவர் பற்றி உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவர் சீன நாட்டு உளவாளி என்றும், தலாய் லாமாவை வேவு பார்க்க இந்தியா வந்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, அந்த சீனப் பெண்ணின் வரைபடத்தை வெளியிட்டு, போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சந்தேகிக்கப்பட்ட அந்த சீன நாட்டுப் பெண்ணை கைது செய்து பீகார் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா, 1959-ஆம் ஆண்டு திபெத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டதால், அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் தங்கியுள்ளார் தலாய் லாமா. ஆண்டுதோறும் புத்த கயாவுக்கு பயணம் மேற்கொள்வார் தலாய் லாமா. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த புத்த கயா பயணத்தை தலாய் லாமா இந்த ஆண்டு மீண்டும் தொடங்கியுள்ளார். தலாய் லாமா, புத்தகயா மாவட்டத்தில் பொது நிகழ்ச்சிகளில் வரும் 31ஆம் தேதி வரை பங்கேற்க உள்ளார்.
இன்று காலை ‘கால் சக்ரா’ மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தலாய் லாமா உரையாற்றினார். இந்நிலையில் இன்று காலை சீனப் பெண் ஒருவரின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் குறித்து உளவுத்துறை, உள்ளூர் போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பீகார் போலீசார் சார்பில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்துப் பேசிய கயா மூத்த காவல் கண்காணிப்பாளர் ஹர்பிரீத் கவுர், கயாவில் வசிக்கும் சீனப் பெண் ஒருவரைப் பற்றி உள்ளூர் காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்தன. இதைக் கருத்தில் கொண்டு, எச்சரிக்கை விடுக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. சீனப் பெண்ணின் இருப்பிடம் குறித்து எந்த தகவலும் இல்லை. அவர் சீன உளவாளி என்ற சந்தேகம் உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
இதனிடையே சாங் சியாலான் என அடையாளம் காணப்பட்ட சீன உளவாளியின் வரைபடத்தை போலீசார் வெளியிட்டு, பொதுமக்கள் அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல்களை வழங்குமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து மத்திய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் அந்தப் பெண்ணை தேடும் பணி தீவிரமடைந்தது.
இந்நிலையில், தலாய் லாமாவை உளவு பார்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் பீகார் போலீசார் அந்த சீனப் பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தேகத்திற்குரிய அந்த சீனப் பெண் ஒரு வருடத்திற்கும் மேலாக புத்த கயா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்துள்ளார். அந்த சீனப் பெண்ணின் விசா காலாவதி ஆகிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புத்த கயாவில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.