ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கவில்லை: அகிலேஷ் யாதவ்

பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் ஒன்று தான். ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கவில்லை என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடனும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை செப்டம்பர் மாதம் 7ம் தேதி ராகுல் துவங்கினார். இதையடுத்து, கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா, தற்போது டெல்லி சென்றுள்ளது. ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இந்தியா மட்டுமல்லாது உலக அளவிலும் ராகுல் காந்தியின் பாத்யாத்திரை பேசு பொருளாகியுள்ளது. டெல்லியில் நடிகர் கமல்ஹாசன் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கலந்து கொண்டார்.

இந்தநிலையில் ராகுல் காந்தியின் யாத்திரை கலந்து கொள்ள தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். இது குறித்து அவர் உத்தரபிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘எங்கள் கட்சி மாறுபட்ட சித்தாந்தத்தை கொண்டுள்ளது. பாஜகவும் காங்கிரஸும் ஒன்று தான். ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தின் மிகப் பெரிய எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவுக்கு மட்டுமின்றி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கும் அழைப்பு அனுப்பப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில், அகிலேஷ் யாதவ் அதை மறுத்துள்ளது குறிப்பிடதக்கது.