ராகுல்காந்தியை பிரதமராக்கும் பணிகளை முன்னெடுப்போம்: கே.எஸ்.அழகிரி

ராகுல்காந்தியின் ஒற்றுமை பாத யாத்திரையின் முக்கியத்துவத்தை நல்ல முறையில் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அதன் மூலம் ராகுல்காந்தி பிரதமராகும் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கூறியுள்ளது.

ராகுல்காந்தி தற்போது கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை நடத்தி வருகிறார். அவரது ஒற்றுமை யாத்திரை சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தற்போது யாத்திரைக்கு விடுமுறைவிடப்பட்டுள்ளது. மீண்டும் வருகிற ஜனவரி 3-ந்தேதி தொடங்குகிறது. 150 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை காஷ்மீரில் முடிவடைகிறது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் தொடர்ச்சியாக ‘அரசியலமைப்பை பாதுகாப்போம்’ மற்றும் ‘கையோடு கை கோர்ப்போம்’ ஆகிய மாபெரும் பிரசாரத்தை முன்னெடுப்பது தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத், விஜய்வசந்த் எம்.பி., செயல் தலைவர் விஷ்ணு பிரசாத், கோபண்ணா, பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், ரஞ்சன்குமார் மாநில நிர்வாகிகள் முருகானந்தம், பலராமன், சிரஞ்சீவி மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் தலைவர்கள், அகில இந்திய செயலாளர்கள், செயல் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அணிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத் ஆலோசனை வழங்கினார். ராகுல்காந்தியின் பாத யாத்திரையின் நோக்கத்தை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்று எடுத்துக் கூறினார். இதற்காக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு வழிகாட்டுதல் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த வழிகாட்டுதல் நோட்டீசுகளை அகில இந்திய காங்கிரஸ் கட்சி வழங்கி இருந்தது. அவை நிர்வாகிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டன. அந்த வழிகாட்டுதல் நோட்டீசில் பல்வேறு வழிகாட்டுதல்கள் இடம் பெற்றிருந்தன. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரி வெல்ல பிரசாத் ஆகியோர் பேசும்போது, “ராகுல்காந்தியின் ஒற்றுமை பாத யாத்திரையின் முக்கியத்துவத்தை நல்ல முறையில் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அதன் மூலம் ராகுல்காந்தி பிரதமராகும் பணிகளை முன்னெடுக்க வேண்டும்,” என்றனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-

நான் தலைவராக இருக்கும் இந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக உண்மையாக கடுமையாக உழைத்து வருகிறேன். தேர்தல்களில் கூட்டணி கசப்புகளை வெற்றிகரமாக கடந்திருக்கிறோம். ஜெயலலிதா காலத்தில் காங்கிரஸ் தரப்பில் கூட்டணி பேசச் சென்றார்கள். அப்போது தன்னிடம் கூட்டணி பேச வந்த நான்கு பேருக்கும் தேர்தல் சீட் இல்லை என்று மறுத்தார் ஜெயலலிதா. கூட்டணி பேச சென்றவர்களுக்கே சீட் இல்லை என்ற நிலையையும் கூட்டணி கட்சிகள் ஏற்படுத்தின.

கடந்த முறை ராஜ்யசபா எம்.பி சீட்டை திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு அளித்தபோது எனக்கு அந்த வாய்ப்பை எடுத்துக் கொள்ளும் உரிமை இருந்தது. ஆனால் ப.சிதம்பரத்துக்கு வாய்ப்பு இருப்பதாக அறிந்தவுடன் நான் அந்த பதவிக்கு முயற்சி செய்யவே இல்லை. அந்தப் பக்கம் நான் திரும்பக் கூட இல்லை. அப்போது நான் மாநில தலைவர் என்ற முறையில் அகில இந்திய தலைவர் சோனியா காந்தியை சந்திக்க நேரம் கேட்டேன். நான் ராஜ்யசபா கேட்டுதான் சந்திக்க முயற்சி செய்வதாக கருதி சோனியா காந்தி கூட என்னை சந்திக்க தயங்கினார். ஆனால் ஒரு மாநில தலைவரை சந்திக்காமல் இருக்க முடியாது என்பதால் என்னை சந்தித்தார். அப்போது அவரிடம், கூட்டணியில் ராஜ்யசபா சீட் தருவதாக சொல்கிறார்கள். யாருக்கு தரலாம் என்று நான் கேட்டதும் என்னை ஆச்சரியமாக பார்த்தார் சோனியா. நான் எந்த பதவிக்கும் எப்போதும் ஆசைப்பட்டதில்லை. பலர் தங்களுக்குப் பதவி கேட்டும் எனது பதவியை பறிக்க கோரியும் டெல்லிக்கு போய் வருகிறார்கள். ஆனால் நான் மாநில தலைவராக இருக்கும் காலத்தில் பதவி கேட்டு டெல்லிக்குப் போனதில்லை. ஐந்தாறு முறைதான் நான் டெல்லிக்கே போயிருக்கிறேன். பதவி கேட்டு யார் வீட்டு வாசல்படியையும் மிதிக்கும் பழக்கம் எனக்கு இல்லை.

இன்று மாலையே என்னை மாற்றலாம், எல்லாமே மாற்றத்துக்கு உட்பட்டதுதான். எனது இருக்கையும் மாற்றத்துக்கு உட்பட்டதுதான் என்பது எனக்குத் தெரியும். இப்போது கூட நான் பேச எழுந்து வந்தவுடன் எனது இருக்கையில் தம்பி விஜய் வசந்த் அமர்ந்துகொண்டார். இன்று மாலையே கூட மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நான் மாற்றப்படலாம். அப்படி மாற்றினால் புதிய தலைவரை அந்த இருக்கையில் அமர வைத்துவிட்டு திருப்தியோடுதான் செல்வேன். இவ்வாறு கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார்.