பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்!

பிரபல கால்பந்து ஜாம்பவான் பிரேசிலை சேர்ந்த பீலே தனது 82 ஆவது வயதில் காலமானார். கால்பந்து விளையாட்டின் மன்னன் என்று அழைக்கப்படும் பீலே உலக கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே வீரர் என்ற சாதனை படைத்திருக்கிறார்.

கிரிக்கெட்டுக்கு பிராட்மேன், சச்சின் எப்படியோ, அதே போல் கால்பந்து உலகிற்கு பீலே விளங்கினார். தனது அபாரமான ஆட்டத்தால் எதிரணி ரசிகர்களை கூட கவர்ந்த பீலே தற்போது கால்பந்து ரசிகர்களை சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாக்கி சென்று விட்டார். பிரேசில் அணிக்காக 95 போட்டியில் விளையாடியுள்ள பீலே 77 கோல்களை அடித்திருக்கிறார். பிரேசிலில் 1940 ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி பிறந்த பீலே இந்த நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். பீலே தனது பதினைந்தாவது வயதில் சாண்டோஸ் அணிக்காக கால்பந்து விளையாட தொடங்கினார். சிறுவயதிலே பலரின் கவனத்தை ஈர்த்ததால் பிரேசில் தேசிய அணியில் தனது 16 வது வயதில் இடம் பெற்றார். இதனைத் தொடர்ந்து தனது 18 வது வயதில் 1958 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடிய பீலே பிரேசில் அணிக்காக கோப்பையை பெற்று தந்தார். இதன் மூலம் இளம் வயதில் உலக கோப்பையில் வென்ற ஒரே கால்பந்து வீரர் என்ற பெருமையும் பீலே பெற்றார். இதனை அடுத்து 1962 ஆம் ஆண்டிலும் பிரேசில் அணி உலக கோப்பை வெல்ல பீலே முக்கிய காரணமாக இருந்தார். இதனை அடுத்து இரண்டு உலகக் கோப்பையை தொடர்ந்து வென்ற ஒரே வீரர் என்ற பெருமையும் பீலேக்கு சொந்தமானது. பிறகு 1970 ஆம் உலக கோப்பையில் விளையாடிய பீலே பிரேசில் அணிக்கு கோப்பையை வென்று தந்தார். இதன் மூலம் மூன்று முறை உலகக் கோப்பை வென்ற ஒரே கால்பந்து வீரர் என்ற சாதனை அவருக்கு சொந்தமானது. இந்த சாதனை இதுவரை எந்த வீரரும் முறியடிக்கவில்லை.

கால்பந்து கிங் என்று அறியப்பட்ட பீலே இதுவரை 1279 கோல்களை தனது கால்பந்து வாழ்க்கையில் அடித்திருக்கிறார். பீலே விளையாடிய காலத்தில் அவர்தான் அதிக சம்பளம் பெற்ற விளையாட்டு வீரராக திகழ்ந்தார். 1977 ஆம் ஆண்டு கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பீலே அன்றிலிருந்து கால்பந்தின் சிறப்பு தூதராக செயல்பட்டார். பீலேவின் செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு பல அரசியல் கட்சிகள் அவரை தேர்தலில் களம் இறக்கியது. இதில் பீலே 1995 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை பிரேசிலின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். பீலேக்கு தனது முதுமை வயதில் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்த அதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வயது மூப்பு காரணமாக சிகிச்சைக்கு பீலே வின் உடல் ஒத்துழைக்கவில்லை. கடந்த நவம்பர் 29ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பீலே ஒரு மாத போராட்டத்திற்கு பிறகு தனது உயிரை விட்டார். பீலேக்கு மூன்று முறை திருமணமாகி இருக்கிறது. அவருக்கு மொத்தமாக ஏழு குழந்தைகள் இருக்கிறார்கள்.

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் மறைவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து இரங்கல் செய்தி குவிந்த வண்ணம் உள்ளன. விளையாட்டு துறையில் பேரிழப்பு என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த நூற்றாண்டில் சிறந்த விளையாட்டு வீரரான பீலேவுக்கு அஞ்சலி செலுத்த ஒபாமா முதல் மெஸ்ஸி வரை ஒன்று கூடி அஞ்சலி செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். பிரேசில் அரசு மூன்று நாள் துக்கத்தை அறிவித்துள்ளது. நாசா விண்வெளியில் பிரேசில் கொடியை பிரதிபலிக்கும் நட்சத்திரத்தை புகைப்படமாக எடுத்து பீலேவுக்காக பதிவிட்டிருக்கிறது.

பீலேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, கால்பந்து என்ற அழகான விளையாட்டை விளையாடிய சிறந்த வீரர்களில் ஒருவர் பீலே , உலகம் முழுவதும் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட வீரராக பீலே திகழ்ந்ததாக ஒபாமா குறிப்பிட்டுள்ளார். விளையாட்டிற்கு மக்களை ஒருங்கிணைக்கும் சக்தி இருப்பதை பீலே அறிந்து கொண்டதாக குறிப்பிட்ட ஒபாமா பீலேவின் குடும்பத்திற்கு மற்றும் ரசிகர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

கால்பந்து ஜாம்பவானான மெஸ்ஸி பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில் ரெஸ்ட் இன் பீஸ் என்று அர்ஜென்டினா மொழியில் குறிப்பிட்டிருக்கிறார்.

மற்றொரு பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரேசில் மக்களுக்காக என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பீலேவின் மறைவால் ஒட்டுமொத்த கால்பந்து உலகமும் எந்த அளவிற்கு துயரத்தில் இருக்கிறது என்பதை வார்த்தைகளால் என்னால் சொல்ல முடியவில்லை. கால்பந்து விளையாட்டின் என்றும் அழியாத அரசன் பீலே என்று குறிப்பிட்டுள்ள ரொனால்டோ, பல கோடி மக்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய வீரராக இருந்தார் என்று பாராட்டியுள்ளார். நேற்று, இன்று நாளை என எந்த வீரர் வந்தாலும் இனி பீலே உடன் தான் ஒப்பிட்டு மக்கள் பேசுவார்கள் என்று குறிப்பிட்ட ரொனால்டோ, பீலே தமக்கு காட்டிய அன்பை என்னால் இனி பெறவே முடியாது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு கால்பந்து ரசிகர்களின் மனதில் எப்போதும் பீலே இருப்பார் என்றும் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

பீலேவின் மறைவுக்கு பிரேசில் வீரர் நேமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பீலேவுக்கு முன்னால் பத்து என்பது வெறும் நம்பராக தான் இருந்தது. உசைன் போல்ட் கால்பந்து என்று ஒரு விளையாட்டை முற்றிலுமாக மாற்றியவர் பீலே. விளையாட்டை கலையாக மாற்றி அதனை பொழுது போக்காக கொண்டு சென்றார். பீலே, ஏழை மக்களுக்காகவும் கருப்பின மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தார். பிரேசிலின் தோற்றத்தையும் கால்பந்தையும் உயர்த்திய பெருமை பீலேக்கு தான் சேரும். பீலே வேண்டுமானாலும் மறையலாம். ஆனால் அவருடைய அதிசயங்கள் என்றும் நம்முடன் இருக்கும் என்று நேமார் பாராட்டிருக்கிறார்.

இதேபோன்று பிரபல ஓட்டப்பந்த வீரர் உசைன் போல்ட் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் விளையாட்டு துறைக்கு ஜாம்பவான் பீலே. இனி அமைதியாக ஓய்வு எடுங்கள் அரசன் பீலே என்று போல்ட் குறிப்பிட்டுள்ளார்.