அதிமுக ஆர்எஸ்எஸ்., பாஜக பாம்புக்குப் பால் ஊற்றி வளர்க்கலமா?: கி.வீரமணி

அண்ணா திமுக 4 பிரிவுகளாக சிதறிய பின்னரும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக பாம்புக்கு பால் ஊற்றி வளர்க்கலாமா? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு வாக்காளர்கள் முந்தைய ஆளும் கட்சியான அ.தி.மு.க.வுக்கே கடந்த தேர்தலின்போது வாக்களித்தனர்.கொள்கையை மறந்துவிட்டு, அல்லது துறந்துவிட்டு, தனது சொந்த சிக்கல்களிலிருந்து விடுவித்துக்கொள்ளவே ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பாம்புக்குப் பால் ஊற்றி வளர்த்து வருகின்றனர் – மூன்று, நான்கு பிளவுகளாகிய பின்னரும்கூட! தங்களைப் பிளந்த கட்சியிடமே, அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமைகளின் நிலைப்பாட்டினை மறந்துவிட்டு, தங்களது கட்சியை – கட்சியின் கொள்கைகளையும் மறந்துவிட்டு – தொண்டர்கள் – அங்குள்ள கொள்கையாளர்கள் (பலராக இல்லாவிட்டாலும், சிலராகவும் இன்னமும் இருக்கவே செய்கிறார்கள்!) விருப்பத்திற்கும், விழைவிற்கும் நேர்மாறாக, அடகு வைப்பதில் போட்டிப் போட்டு ‘சரணம்’ பாடத் தயாராகிவிட்டனர்!

தங்கள் கட்சியையும் விழுங்கவரும் மலைப்பாம்பு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. என்ற கட்சி அமைப்புகள் என்ற உண்மையை அறிந்த போதிலும்கூட, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வுக்கு ஆலவட்டம் சுற்றுவதையே தமது முக்கிய பணியாகக் கொண்டுள்ளனர் என்பது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியது. அதுமட்டுமா? அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் ”மோடியா? லேடியா?” என்று பகிரங்கமாகக் கேட்டதோடு, கூட்டுச் சேர விண்ணப்பம் போட்ட பா.ஜ.க.வுக்கு, ”இலையில் கூட்டு வைப்பேனே தவிர, இலையுடன் உங்களைக் கூட்டு – கூட்டணி சேரவிடமாட்டேன்” என்று தடாலடி பதில் கூறியதை போல, காற்றில் பறக்கவிட்டு, இப்பொழுது இவர்கள் காவிகளுடன் கொஞ்சி அல்லது கெஞ்சிக் கூட்டுச் சேர ஆயத்தமாவது ஓர் அரசியல் தற்கொலை முயற்சி அல்லவா?

எதிர்க்கட்சித் தலைவராக உள்ள இ.பி.எஸ். என்றழைக்கப்படும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஓர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வாய்ப்பை எப்படிப் பயன்படுத்துகிறார்? அதற்குத் தமிழ்நாடு அரசின் கைத்தறித் துறை அமைச்சர் மாண்புமிகு காந்தி அவர்கள், இன்று எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கை எப்படி உண்மை அறியாத, அபத்த அறிக்கையாக உள்ளது என்பதை – ஆணியடித்தாற்போல் ‘நச்’சென்று பதிலளித்து – விளக்கம் அளித்துள்ளார்! பொங்கலுக்கு மக்களுக்கு இலவச வேட்டி – சேலை வழங்கல் குறித்த அவரது அறிக்கையில், ”பொங்கலுக்கு இலவச வேட்டி – சேலை வழங்குவது குறித்து அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குழப்பமான அறிக்கை வெளியிட்டு, மக்களைக் குழப்பவேண்டாம். முதலமைச்சர் அவர்கள் 19.11.2022 அன்று தலைமைச் செயலகத்தில் பொங்கல் திருநாளையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி – சேலைகளின் தரத்தை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்திரவிட்டார். அந்த ஆய்வுக் கூட்டத்தில், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டம் குறித்த செய்திகள் அனைத்துப் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இதைக் கூடப் பார்க்காமல், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வேட்டி – சேலை வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று ஒரு வெற்று அறிக்கையை வெளியிட்டுள்ளார்! ஒரு கோடியே 79 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்குக் கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் முழுமையாக பொங்கல் திருநாளுக்கு இலவச வேட்டி – சேலைகள் வழக்கம்போல வழங்கப்படும் என்பதை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். 2023 ஆம் ஆண்டு பொங்கல் விழாவிற்கு வேட்டி – சேலை வழங்கும் திட்டத்திற்கு ஏற்கெனவே 487.92 கோடி ரூபாயை நமது முதலமைச்சர் ஒதுக்கீடு செய்ய ஆணையிட்டுள்ளார். இப்படி இருக்கையில், ஏன் போராட்டம்? போராட்டம் நடத்துவது எதிர்க்கட்சிகளின் தேவையாக இருக்கலாம், ஜனநாயகத்தில். ஆனால், இதுபோன்ற அர்த்தமில்லாத அபத்தப் போராட்ட அறிவிப்பாகவா வெளியிடுவது?

‘நீட்’ தேர்வை எதிர்க்கிறோம், இந்தியை எதிர்க்கிறோம் என்பது போன்ற வெறும் வார்த்தைக்குப் பதிலாக, தமிழ்நாட்டு மக்கள் நலன் காக்க உருப்படியான போராட்டங்களை நடத்த அவருக்குச் சரியான ஆலோசனைகளை அக்கட்சி முக்கியஸ்தர்கள் வழங்கவேண்டும். சமூகநீதிக்கு வரும் ஆபத்தைத் தடுத்து நிறுத்தும் வகையில் – அத்திசை நோக்கி அல்லவா இவர்கள் நடத்தும் போராட்டங்கள் இருக்கவேண்டும். சிந்திப்பார்களாக. இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.