திமுக முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை செய்யப்பட்டது அம்பலம்: 5 பேர் கைது!

மாநில சிறுபான்மையினர் நல ஆணைய துணைத் தலைவரும், திமுக முன்னாள் எம்பியுமான மஸ்தான் கொலை செய்யப்பட்டது போலீசாரின் தொடர் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

திமுக முன்னாள் எம்பியும், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினா் நல உரிமை பிரிவுச் செயலாளராக இருந்த டாக்டா் மஸ்தான் (66). இவர் குடும்பத்துடன் சென்னை சேப்பாக்கத்தில் வசித்து வந்தாா். கடந்த வியாழக்கிழமை(டிச.22) காலை சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது, திடீரென அவருக்கு நெஞ்சுவலி வலிப்பு ஏற்பட்டதை அடுத்து அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ஆனால், அவரது குடும்பத்தினர் மஸ்தான் மறைவில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து மஸ்தான் மறைவை சந்தேக மரணமாக ஊரப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

நெஞ்சுவலி வலிப்பால் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் மஸ்தான் மறைவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அதாவது, மஸ்தான் சந்தேக மரண வழக்கு விசாரணையில், அவரது சகோதரரின் மருமகன், கார் ஓட்டுநர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. விசாரணையில், மஸ்தான் உறவினர்களால் கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில், அவரை வாய், மூக்கைப் பொத்தி குற்றவாளிகள் கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. முதற்கட்டமாக, அவரது மூக்குப் பகுதியில் காயம் இருந்ததைப் பார்த்த மஸ்தானின் மகன், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், அவரது உடல் கூறாய்விலும் அவர் மூச்சுத் திணறி பலியானதாக மருத்துவ அறிக்கை வெளியானது. இதையடுத்துத்தான், அவருக்கு மூச்சுத் திணறல் எப்படி நேரிட்டிருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அவருடன் காரில் சென்ற, மஸ்தான் சகோதரரின் மருமகன் இம்ரானிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை அளித்திருந்தார். இது அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக மஸ்தான் உயிரிழக்கும் போது அவருடன் இருந்த அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில், மஸ்தானின் வாய், மூக்கைப் பொத்தி கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினா் நல உரிமை பிரிவுச் செயலாளராக இருந்தவா் டாக்டா் மஸ்தான் (66). 1995-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை மாநிலங்களவையின் அதிமுக உறுப்பினராக இருந்தாா். இதைத் தொடா்ந்து, திமுகவில் இணைந்தாா். அந்தக் கட்சியில் சிறுபான்மையினா் நலப் பிரிவில் பொறுப்பு வகித்து வந்தாா். திமுக ஆட்சிக்கு வந்ததும், அவருக்கு தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவா் பொறுப்பு அளிக்கப்பட்டது. குடும்பத்துடன் சென்னை சேப்பாக்கத்தில் வசித்து வந்தாா். மஸ்தான், தனது மகனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தார். 23ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது. திருமணத்துக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களை நேரில் சந்தித்து அவர் அழைப்பிதழ் கொடுத்து வந்த நிலையில்தான் மரணம் அடைந்தார்.

சம்பவத்தன்று, சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் வியாழக்கிழமை காலை காரில் சென்று கொண்டிருந்தாா். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும், அவரை மருத்துவமனையில் அனுமதித்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் மாரடைப்பால் மரணம் அடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ்கள் கொடுத்து வந்த மஸ்தான் உறவினர்களாலேயே கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.