தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகள் செய்பவர்களை சமூக விரோதிகளாகக் கருதி அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் மாநிலச் செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் மாநிலச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கடந்த சில தினங்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சிக்குள்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களை அங்குள்ள ஆலயத்திற்குள் சென்று கடவுள் வழிபாடு செய்ய அனுமதி மறுத்தும், அந்த கிராமத்தில் பொது இடங்களைப் பயன்படுத்த தடை விதித்தும், மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் அந்த மேல்நிலைத் தொட்டியில் ஆதிக்க சாதியினர் மனித கழிவுகளை கலந்து மனிதத்தன்மையற்ற வகையில் நடந்து கொண்டதை மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி வன்மையாகக் கண்டிக்கிறது
வெண்மைப் புரட்சி, பசுமைப் புரட்சி, விஞ்ஞானப் புரட்சி என பல புரட்சிகளை உருவாக்கி உலகளவில் முதலிடத்தை நோக்கி வளர்ச்சியடைந்த நாடாக முன்னேறி வரும் இந்தியாவில் தீண்டாமை, சாதி ஒழிப்பு, பெண்கள் சமத்துவத்திற்காக போராடிய தந்தை பெரியார் வழி வந்த கழகங்கள் ஆட்சி செய்த, செய்து வருகின்ற இந்த 21ம் நூற்றாண்டில் தமிழகத்தில் இன்னும் பட்டியலின மக்களை கடவுள் வழிபாடு நடத்த ஆலயத்திற்குள் அனுமதிக்க மறுப்பது, குடிதண்ணீர் குழாய்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மற்றும் பொது இடங்களை பயன்படுத்தத் தடை விதிப்பது, இரட்டைக் குவளை தீண்டாமையை நடைமுறையில் வைத்திருப்பது, சாதி மறுப்பு திருமணம் செய்வோரை ஆணவப் படுகொலை செய்வது போன்ற தீண்டத்தகாத செயல்கள் இன்னும் தொடர்ந்து வருவது வேதனைக்குரிய விசயமாகும்.
மேலும் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து நேரில் சென்று விசாரணை நடத்தி அங்கே நடைபெற்ற தீண்டாமை கொடுமை விவகாரத்தில் தலையிட்டு, நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையுமாய், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளோடு பாரதி கண்ட புதுமைப் பெண்களாய் சிறப்பாக செயல்பட்டு பட்டியலின மக்களை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்று அவர்களை கடவுள் வழிபாடு செய்ய வைத்ததோடு, தீண்டாமைக் கொடுமைகளை கடைப்பிடித்து வந்தோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தும், குடிநீர் மேல்நிலை தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோரது செயலை மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி மனதார பாராட்டுகிறது.
அதே சமயம் இந்த தீண்டாமை நிகழ்வுகள் என்பது இன்று, நேற்றோ அல்லது திடீரென்று நடந்த நிகழ்வாகவோ இருந்திருக்க முடியாது எனும் போது இதுவரை அந்த அவலத்தை சரி செய்ய அல்லது தீண்டாமைக் கொடுமைகள் புரிவோரை சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்க ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும் முன் வராமல் இருந்திருப்பதும் கொடுமையிலும் கொடுமையாகும். வேங்கைவயல் கிராமத்தில் மட்டுமல்ல தமிழகத்தில் இது போன்ற பல்வேறு கிராமங்களில் இன்றளவும் பட்டியலின மக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் தீண்டாமை கொடுமைகளை ஒழிக்க அல்லது தடுக்க காவல்துறை, நிர்வாகத்துறை உள்ளிட்ட அதிகாரவர்க்கம் தங்களின் கடமைகளிலிருந்து தவறியிருக்கும் சூழலில் அதனை சுட்டிக்காட்ட கடந்த 50ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட, ஆளுகின்ற கழகங்களில் இருந்து ஒரு கிளைச் செயலாளர் கூட அந்த பகுதிகளில் இல்லாமல் இருந்திருக்க முடியாது. அப்படியானால் அந்த தீண்டாமை கொடுமைகள் அனைத்தும் இத்தனை ஆண்டுகாலம் ஆட்சிபுரிவோரால் கண்டும், காணாமல் சகித்துக் கொண்டோ அல்லது அதனை அங்கீகரித்தோ கடந்து வரப்பட்டிருக்கிறது.
கடவுளின் பெயராலோ, சாதி, மதத்தின் பெயராலோ பட்டியலின மக்களை தீண்டத்தகாதவர்களாக நடத்துவதை தமிழக அரசு இனியும் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காமல், பெரியார் வழி பின்பற்றி ஆட்சிபுரிவதாக சுயபெருமை பேசிக் கொண்டிருக்காமல் தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகள் புரிவோரை சமூக விரோதிகளாக கருதி அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும், சாதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை சரியான முறையில் கடைப்பிடிக்கவும் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.