பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டத்தை தொடர இடைநிலை ஆசிரியர்கள் முடிவு!

ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி சென்னை டிஐபி வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் போராட்டத்தை தொடர இடைநிலை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த 2009-ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுகு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு நாள் வித்தியாசத்தில் நியமிக்கப்பட்ட இந்த ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஊதிய வேறுபாட்டால் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இந்த ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி கடந்த 2016-ஆம் ஆண்டு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. 7-வது ஊதியக் குழுவில் 2009க்குப் பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய பரிந்துரைக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு இந்த உத்தரவாதத்தை நிறைவேற்றவில்லை என்று கூறி தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை இதுவரை ஏற்கப்படவில்லை. இதனால், தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை டிஐபி வளாகத்தில் இருக்கும் பள்ளிக் கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் உண்ணா விரத போராட்டத்தை தொடங்கினர். கடந்த 27 ஆம் தேதி இந்த போராட்டத்தை இடைநில ஆசிரியர்கள் தொடங்கினர். இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொண்டு ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். குடும்பத்துடன் இந்த போராட்டத்தில் இடைநிலை ஆசியர்கள் ஈடுபட்டுள்ளனர். 4-வது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சுமார் 140 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் அவர்கள் குடும்பத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தொடக்க கல்வி இயக்குனர், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஆகியோருடன் ஆசிரியர்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் இடை நிலை ஆசிரியர்கள் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 30 நிமிடம் நீடித்தது. எனினும் ஆசிரியர்களின் கோரிக்கை இந்த பேச்சுவார்த்தையில் ஏற்கப்படவில்லை. பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என்றும் இடைநிலை ஆசிரியர்கள் பதிவு மூப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. இதனால் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.