முதல்வர் ஸ்டாலினைவிட தகுதியானவர் கனிமொழி என்பது என் கருத்து: சீமான்

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக அமைச்சரவையில் கூடுதல் அமைச்சர்களாக பெண்களை நியமிக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலினைவிட தகுதியானவர் கனிமொழி என்பது என் கருத்து என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இயற்கை வேளாண்மையை வலியுறுத்திய நம்மாழ்வார் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:-

திராவிட அரசன் என்று பெயர் வைக்கின்றனர் திமுகவினர். திராவிட அரசன் என்றால் திராவிட அரசின் எல்லை எது? திராவிடம் என்பதன் மொழி எது? நாங்கள் தமிழரசன் என பெயர் வைத்தால் தமிழ், தமிழர்கள் என்பதால் தமிழரசன் என பெயர் வைக்கின்றோம். திராவிட அரசுன்னா எதுவரைக்கும் திராவிட நாட்டின் எல்லைப் பரப்பு? எந்த நிலப்பரப்புக்கு அரசனாக இருந்து ஆளப் போகிறாராம்? அது ஒரு கொடுமை நிகழ்கிறது.

கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் தேவை இல்லை என்பதை முதல் நாளில் இருந்தே எதிர்க்கிறேன். எதற்காக பேனா நினைவு சின்னம்? ஒவ்வொரு தலைவருக்கும் ஒவ்வொரு பொருளை நினைவு சின்னமாக வைப்பீங்களா? எழுதாத பேனாவை வைப்பது பகுத்தறிவு.. எழுதுகிற பேனாவை பூஜை அறையில் வைப்பது முட்டாள்தனமா? என்கிற கேள்விக்கு பதில் இருக்கிறதா? எதற்கு பேனா? சமாதிகளே அதிகம் என்கிறோம். காமராஜர், கக்கன், முத்துராமலிங்க தேவர், மருது பாண்டியர், வேலுநாச்சியார், பெரும்பிடுகு முத்தரையர் போன்றவர்களை எல்லாம்விட இவர்கள் என்ன தியாகம் செய்துவிட்டார்களா? வ.உ.சிக்கு நீங்கள் வைத்த நினைவிடம் எங்கே? எதுக்கு இந்த தண்டச் செலவு? பள்ளிக்கூடம் கட்ட காசில்லை.. மக்களிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிற உங்களுக்கு எதுக்கு இந்த நினைவு சின்னம்? அதுவும் கடலுக்குள் பேனா நினைவு சின்னம் ஏன்? சூழலியல் அறிவு இருந்தால் காப்பு காடுகள் அருகே கல்குவாரிகள் அமைக்க அனுமதிப்பீர்களா?

முதியவர்களுக்கு வழங்க வேண்டிய உதவித் தொகையை நிறுத்திவிட்டது அரசு. ஆனால் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு எதற்கு உதவித் தொகை? தங்களுக்கு உதவி வேண்டும் என மாணவிகள் கேட்டார்களா? ஓட்டைப் பறிக்கத்தான் கொடுக்கிறீர்கள்.. முதியோர்கள் ஓட்டுப் போட முடியாதவர்கள்.. அதனால் கொடுக்கவில்லை. மகளிர் உயர்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.. திமுக பேசுகிறது. மகளிர் உயர்வுக்கு நீங்கள் கொடுத்தது என்ன? எத்தனை அமைச்சர் பதவி மகளிருக்கு கொடுத்திருக்கிறீர்கள்.. இரண்டுதான். சட்டசபையில், லோக்சபா, ராஜ்யசபாவில் எத்தனை இடம்? கட்சியில் எத்தனை பெண்களுக்கு பொறுப்பு கொடுத்திருக்கீங்க? ஆண்டுக்கு ரூ50,000 கோடிக்கு மதுபானம் குடிக்கிற ஒரு சமூகத்துக்கு எதற்காக இலவசம் தேவைப்படுகிறது? சாராயக் கடைகளால் தாலி அறுத்துக் கொண்டு பெண்கள் நிற்பதுதான் மகளிர் உயர்வா? மகளிர் தலை நிமிர்வா?

மகளிர் மேம்பாடு பேசும் நீங்கள், இரண்டரை ஆண்டுகாலம், முதல்வர் பதவியை கருணாநிதி குடும்பத்தை சேர்ந்த கனிமொழிக்கு கொடுக்க தயாரா? முதல்வர் ஸ்டாலினைவிட தகுதியானவர் கனிமொழி என்பது என் கருத்து. இதை திமுகவினரோ பொதுமக்களோ மறுக்கப் போவது இல்லை.

மீனம்பாக்கத்தில் உள்ள விமானநிலையமே போதுமானதாக இருக்கும் நிலையில் புதிதாக 5 ஆயிரம் ஏக்கரில் விமான நிலையம் எதற்கு? அதற்கு 4 ஆயிரம் கோடி ஒப்பந்தம் போட்டால் கமிஷன் கிடைக்கும் என்பதற்காகவே அந்த திட்டத்தை கொண்டு வருகிறார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.