ஆசிரியர்களை திமுக அரசு துச்சமாக மதிப்பது கண்டனத்திற்குரியது: டிடிவி தினகரன்

சென்னையில் 4 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வரும் ஆசிரியர்களில் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கவலையளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி கடந்த 27ம் தேதி முதல் ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று நான்காவது நாளாக போராட்டம் நீடித்து வருகிகிறது. கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதியில் இருந்து பணியை தொடங்கிய ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்னாள் பணியில் சேர்ந்தவர்களுக்கும் ஊதியத்தில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது என்றும், இதனை சரிசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். கடந்த 2014ம் ஆண்டு முதல் அதற்காக இவர்கள் போராடி வருகிறார்கள்.

நேற்று போராட்டக் குழுவினருடன் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. இதனால் ஆசிரியர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. போராட்டத்தில் நேற்று வரை 69 ஆசிரியர்கள் மயக்கம் அடைந்தனர். இன்று காலை 10 பேர் மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆசிரியர்களின் போராட்டம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துளார். இந்த விவகாரம் குறித்து டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களை திமுக அரசு துச்சமாக மதிப்பது கண்டனத்திற்குரியது. ஒரே தகுதி, ஒரே பணி என்ற நிலையிலும் 2009ம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் வேலையில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களிடையே அடிப்படை ஊதியத்தில் பாரபட்சம் காட்டுவது சரியானதல்ல. இதுதான் திராவிட மாடலா?

இந்த ஊதிய முரண்பாட்டைக் களையக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு சென்னையில் 4 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுவரும் ஆசிரியப் பெருமக்களில் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற மாணவச் செல்வங்களை உருவாக்கும் ஆசிரியர்களை ஊதியத்திற்காக இப்படி வருந்த வைப்பதுதான் திமுகவின் திராவிட மாடலா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.